பி.எஸ்.என்.எல்., பயன்படுத்த மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
புதுடில்லி:மேம்பட்ட தரவுகள் பாதுகாப்புக்காக பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகிய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்துமாறு, மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு தொலைத்தொடர்புத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தொலைத்தொடர்பு நிறுவனங்களை மேம்படுத்துவதையும், தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, கடந்த 2019ம் ஆண்டு, மத்திய அமைச்சரவை ஒரு முக்கிய முடிவை எடுத்தது.இதனடிப்படையில், மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் அவை தொடர்புடைய துறைகள் அனைத்தும் பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., வாயிலாக தொலைத்தொடர்பு சேவைகள் பெறுவதை கட்டாயமாக்கியது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே, ஆயுதப்படைகள் மற்றும் முக்கிய வங்கி வலையமைப்புகளின் தேவைகளை, இவ்விரு நிறுவனங்களும் பூர்த்தி செய்து வருகின்றன. அந்த வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் அரசுகளின் அனைத்து துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஏஜன்சிகளுக்கான இணையம், பிராட்பேண்டு, லேண்ட்லைன் உள்ளிட்ட தேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்.,லின் தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்த 2019, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில், அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., தற்போது போட்டித்தன்மையுடன் மாறி வருவதுடன், நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாகவும் மாறியுள்ளன. இவ்வாறு தெரிவித்து உள்ளது.