செயற்கை வைர ஆபரண தொழில்: டி பீர்ஸ் முழுக்கு
லண்டன்:தொடர்ச்சியாக விலை வீழ்ச்சி கண்டு வருவதால், செயற்கை வைர ஆபரணங்கள் தொழிலில் இருந்து வெளியேற, 'டி பீர்ஸ்' குழுமம் முடிவு செய்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட டி பீர்ஸ் குழுமம், 1888ம் ஆண்டு முதல் வைரங்கள் வெட்டி எடுப்பது, பட்டை தீட்டுவது முதல் விற்பனை வரை ஈடுபட்டு வருகிறது. கடந்த 2018ல், செயற்கை வைர ஆபரணங்கள் விற்பனைக்கென, 'லைட்பாக்ஸ்' பிராண்டை இந்நிறுவனம் துவங்கியது. தன் மற்றொரு துணை நிறுவனமான 'எலிமண்ட் சிக்ஸ்' செயற்கை வைர ஆபரணங்களை தயாரித்து அளித்தது. அப்போது, காரட் ஒன்றின் விலை 800 டாலராக நிர்ணயித்தது. ஆனால், அது முதல் தற்போது வரை, ஆபரண தயாரிப்புக்கான செயற்கை வைரத்தின் மொத்த விலை 90 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனையடுத்து, செயற்கை வைரங்களில் இருந்து ஆபரணம் தயாரிக்கும் தொழிலில் இருந்து முழுதும் விலகி, இயற்கை வைரங்கள் விற்பனையில் தீவிர கவனம் செலுத்த டி பீர்ஸ் குழுமம் முடிவு செய்துள்ளது.