சர்வதேச திறன் மையங்களை அமைப்பதில் பின்தங்குகிறது தமிழகம்: தொழில் துறை செயலர்
சென்னை:பல்வேறு பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழகம் முன்னிலை வகித்தாலும், ஜி.சி.சி., எனப்படும், சர்வதேச திறன் மையங்கள் அமைப்பதில் பின்தங்கியுள்ளதாக, தொழில் துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்து உள்ளார்.சென்னையில், மாநில அரசின் தொழில் வழிகாட்டி அமைப்பான 'கெய்டன்ஸ் தமிழ்நாடு' மற்றும் 'கிரியேட்ஒர்க்ஸ்' அமைப்பு இணைந்து, 'ஜி.சி.சி., நெக்ஸ்ட்24' என்ற மாநாட்டை நடத்தின. அதில் அருண் ராய் பேசியதாவது:பெரும்பாலான பொருளாதார குறியீடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், சர்வதேச திறன் மையங்களைப் பொறுத்தவரை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி, புனே ஆகிய நகரங்களின் போட்டியில் தமிழகம் பின்தங்கியுள்ளது. நாட்டில் 1,800 ஜி.சி.சி.,க்கள் உள்ள நிலையில், 250 மையங்கள் மட்டுமே தமிழகத்தில் இருக்கின்றன. இதில் எங்கோ தமிழகம் தவற விட்டுள்ளது. எனவே, ஜி.சி.சி., அமைப்பதிலும் செயல்பாட்டிலும், மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். திறமையான பணியாளர்கள், தரமான பணிகளில் நாட்டிலேயே தமிழகம் அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டிருக்கிறது. கட்டமைப்புகள் சிறப்பாக உள்ளன. பல நகரங்கள் விமான நிலைய இணைப்புடன் இருக்கின்றன. ஆனால், மாநிலத்தின் பொருளாதாரம் சென்னையில் மட்டுமே கவனம் செலுத்தப்படுவதாக உள்ளது.கோயம்புத்துார் உள்ளிட்ட சில நகரங்கள் இரண்டாம் நிலை பெருநகரங்களாக தரம் பெற்றிருக்கின்றன. திருச்சி, மதுரை ஆகியவையும் சர்வதேச திறன் மையம் அமைப்பதற்கு ஏற்ற நகரங்கள் தான். இவ்வாறு அருண் ராய் பேசினார்.கவனம் பெறும் சென்னை
சென்னையில் சர்வதேச திறன் மையங்கள் எண்ணிக்கை, 2030ம் ஆண்டுக்குள் 450ஆக அதிகரிக்கும் என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ., யின் அறிக்கை தெரிவித்துள்ளது. ஜி.சி.சி., மற்றும் வணிக விரிவாக்கத்தில் முக்கிய மையமாக சென்னை திகழும் என்றும்; நாட்டின் சர்வதேச தரத்திலான திறன் பெற்ற பணியாளர்களில் தமிழகம் 11 சதவீதம் வகிக்கிறது என்றும் கூறியுள்ளது. உலக முன்னணி நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்தை அமைக்க சாதகமான அனைத்து அம்சங்களையும் சென்னை பெற்றுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.