தமிழக ஸ்டார்ட் அப்களின் மதிப்பு ரூ.2.32 லட்சம் கோடியானது: அன்பரசன்
சென்னை:''தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் மதிப்பு, 2024ல், 27 பில்லியன் டாலர் அதாவது, 2.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.சென்னை நந்தம்பாக்கத்தில், 14வது உலக தமிழ் தொழில் அதிபர்கள் மாநாட்டில் அன்பரசன் பேசியதாவது: இந்தியாவில், அதிக வேலை வாய்ப்பை வழங்குவதிலும், உயர் கல்வி சேர்க்கையிலும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் இருப்பதிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை வாயிலாக, 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இதுவரை, 78,307 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், 21,657 கோடி ரூபாய் முதலீட்டில், 2,139 நிறுவனங்கள் தொழில்களை துவங்கியுள்ளன. வேலைவாய்ப்பை உருவாக்கும், தமிழக அரசின் ஐந்து சுயநிதி திட்டங்களின் கீழ், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 1,805 கோடி ரூபாய் மானியத்துடன், 4,601 கோடி ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2021ல், 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது, 10,000 உள்ளன. அதில், 4,925 நிறுவனங்களின் நிறுவனர்களாக பெண்கள் உள்ளனர். கடந்த, 2020ல், 25,800 கோடி ரூபாயாக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மதிப்பு தற்போது, 2.32 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.