பழைய தொழில்நுட்பத்தில் முதல் சிப் தயாரிக்கும் டாடா
புதுடில்லி: நாட்டின் முதல் செமிகண்டக்டர் சிப் பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது: குஜராத்தின் தோலேரா பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைக்கும் பெரிய அளவிலான செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையில், 90 நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சிப் தயாரிக்கப்பட உள்ளது. இது மிகவும் முதிர்ச்சியடைந்த பழைய தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனம் தனது செமிகண்டக்டர் உற்பத்தியை 28 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது 90 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உற்பத்தியை தொடங்குவது, தொழில்நுட்ப மற்றும் உற்பத்திசார் சவால்களை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.