ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் நிறுவ அரசின் 50% முதலீட்டு மானியம் தேவை ஜவுளி தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
திருப்பூர்:ஜவுளி தொழிலில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களை நிறுவ, 50 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டு மென, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.பிரிட்டனுடன் உருவாகியுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் உருவாகும் வர்த்தக ஒப்பந்தத்தால், அந்நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியும் அதிகரிக்கும்.உலக அளவிலான வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஜவுளி தொழில் துறையினர், சங்கடங்களை கடந்து சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அத்தியாவசியமான உதவிகள் வேண்டும் என்பதே, நாடு முழுதும் உள்ள தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு.புதிய தொழில்நுட்பத்தை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தும் வசதி இந்தியாவில் மிக குறைவு. அதிலும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான 'டப்' திட்டமும் நிறுத்தப்பட்டது. கொரோனாவுக்கு பின், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவுவதும் நின்றுபோனது.போட்டி நாடுகளில், ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன; இந்தியாவில் நவீன ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்கள் வந்தால் மட்டுமே, பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.எனவே, ஏ.ஐ., தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவ, 50 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கி மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.