பஞ்சு இறக்குமதி வரி ரத்து ஜவுளித்துறை செயலர் உறுதி
திருப்பூர்:பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய, மத்திய நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படுமென, மத்திய ஜவுளித்துறை கமிஷனர் ரூப் ரிஷி உறுதி அளித்துள்ளார்.பஞ்சு இறக்குமதி வரி தொடர்பான கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. மத்திய ஜவுளித்துறை செயலர் ரூப் ரிஷி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான அமைப்புகளின் நிர்வாகிகள், 'பஞ்சு இறக்குமதிக்கான வரி, 11 சதவீதத்தை முற்றிலும் நீக்க வேண்டும்' என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.சந்திப்பில் பங்கேற்ற தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பஞ்சு இறக்குமதிக்கான வரி, 11 சதவீதத்தை நீக்குவதால், அமெரிக்காவில் இருந்து, வரியில்லாமல் பஞ்சு இறக்குமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும். ''அதன் எதிரொலியாக, ஜவுளி ஏற்றுமதியாளர் பயன்பெறும் வகையில், பரஸ்பர வரிகுறைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கோரிக்கை விடுத்தோம். ''தொழில் நலன்கருதி, பஞ்சு இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்கலாம்; இல்லாவிடில் ஆறு மாதங்களாவது வரியில் இருந்து விலக்கு அளிக்கலாம். இதுதொடர்பாக, நிதித்துறை அமைச்சரகத்துக்கு பரிந்துரைக்கப்படும் என, கமிஷனர் உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.