நாட்டின் ஏற்றுமதி மூன்றாவது மாதமாக சரிவு
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி மதிப்பு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த ஜனவரியிலும் சரிந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 2.38 சதவீதம் குறைந்து, 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதே வேளையில், இறக்குமதி 10.28 சதவீதம் உயர்ந்து, 5.17 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.வளர்ச்சிஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த மாதம் 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பரில் 1.91 லட்சம் கோடி ரூபாயாகவும்; கடந்தாண்டு ஜனவரியில் 1.44 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. கடந்த மாதம் பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் ஏற்றுமதி கணிசமாக சரிந்துள்ளது. ஜவுளி, மின்னணுவியல், பொறியியல், அரிசி மற்றும் கடல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இவை தவிர, கடந்தாண்டு ஜனவரியில் 16,500 கோடி ரூபாயாக இருந்த தங்க இறக்குமதி, நடப்பாண்டு ஜனவரியில் 23,300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மொத்த ஏற்றுமதி 1.39 சதவீதமும்; இறக்குமதி 7.43 சதவீதமும் வளர்ச்சி கண்டுஉள்ளன.கடந்த மாதம் நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 3.35 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 1.59 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் துறை வர்த்தகம் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும். இதனிடையே, உலகளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில், இந்தியாவின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி சிறப்பாகவே உள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பர்த்வால் தெரிவித்துள்ளார். கணிசமாக அதிகரிப்புகடந்த மாதம் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி 39 சதவீதம் உயர்ந்து, 73,400 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், அந்நாட்டிலிருந்து இறக்குமதி 33.46 சதவீதம் அதிகரித்து 31,000 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 8.95 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியா வர்த்தக உபரி கொண்டுள்ள ஒரு சில நாடுகளில், அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2030ம் ஆண்டுக்குள், இரு தரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது கிட்டத்தட்ட 43.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
காலகட்டம் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பற்றாக்குறை
2025 ஜனவரி 3.17 5.17 2.002024 ஏப்., - 2025 ஜனவரி 31.23 52.37 21.14(ரூ. லட்சம் கோடியில்)
உயர்வு
''தமிழகத்தில், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி, கடந்த மூன்று ஆண்டுகளில், 13,760 கோடி ரூபாயில் இருந்து, 82,216 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,'' என, தொழில் துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார். 'எல்சினா' எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில், 'சோர்ஸ் இந்தியா - எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின்' கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது, இன்று நிறைவடைகிறது. இதில், எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஈடுபட்டுள்ள, 150க்கும் மேற்பட் நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், 'எல்சினா' தலைவர் சசிகுமார் கெந்தம் பேசும்போது, ''உலகில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தியில், இந்தியா முன்னணியில் உள்ளது; 2015 - 16ல், 3.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, 2023 - 24ல், 9.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது'' என்றார். சென்னை 'தக் ஷின் பாரத்' லெப்டினன்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பிரார் பேசும்போது, ''ராணுவத்தில் பயன்படுத்தப்படும், 70 - 80 சதவீத ஆயுதங்களில், எலக்ட்ரானிக்ஸ் பயன்படுகிறது. உ.பி., தமிழகத்தில் ராணுவ தொழில் பெரு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன; ராணுவத்தின் தேவையை கேட்டறிந்து, தொழில் துறையினர், அந்த வழித்தடத்தில் விரைந்து தொழில் துவங்க முன் வர வேண்டும்'' என்றார்.தொழில் துறை செயலர் அருண்ராய் பேசியதாவது:தமிழகம் உற்பத்தி துறையில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. தொழிற்சாலைகளும், அதிக பெண் தொழிலாளர்கள் இருப்பதிலும், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு, 20 சதவீதமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில், நுகர்வோர் சாதனங்கள், மொபைல் போன், உதிரி பாகங்கள் தமிழகத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த, 2020 - 21ல், 13,760 கோடி ரூபாயாக இருந்த தமிழக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஏற்றுமதி, 2023 - 24ல், 82,216 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளில், எட்டு மடங்கு உயர்வு இது. 'செமி கண்டக்டர்' உள்ளிட்ட முக்கிய உதிரி பாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தங்கம் இறக்குமதி 41% அதிகரிப்பு
உள்நாட்டில் தேவை அதிகரித்ததால், கடந்த ஜனவரியில் நாட்டின் தங்கம் இறக்குமதி, முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 41 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2024, ஜனவரியில் நாட்டின் தங்கம் இறக்குமதி மதிப்பு, 16,340 கோடி ரூபாய். நடப்பாண்டு ஜனவரியில், 41 சதவீதம் அதிகரித்து, 23,048 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், தங்கம் இறக்குமதி 32 சதவீதம் அதிகரித்து உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி, 3.25 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.