உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வரி வழக்குகளை பேசி தீர்க்க அக்., 1 முதல் திட்டம் அமலாகிறது

வரி வழக்குகளை பேசி தீர்க்க அக்., 1 முதல் திட்டம் அமலாகிறது

புதுடில்லி:வருமான வரி உட்பட நேரடி வரிகள் தொடர்பான வழக்குகள், தாவாக்களுக்கு தீர்வு காண்பதற்கான 'விவாத் சே விஸ்வாஸ் 2.0' திட்டம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் செயல்படும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.வருமான வரி விதிப்பு தொடர்பாக, வரி செலுத்துவோர் மற்றும் வரித்துறை இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல்வேறு தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன. வரி குறைதீர்ப்பு தீர்ப்பாயம் துவங்கி, உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் இதுபோன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.நீண்ட காலமாக தீர்வு காணப்படாத வருமான வரி வழக்குகளை குறைக்கும் நோக்கில், துறை அதிகாரிகளுடன் பேசி, இருதரப்புக்கும் ஏற்புடைய தீர்வுகளை காண்பதற்கான, விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம், அக்டோபர் 1ம் தேதி முதல் செயல்படுத்துகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தீர்வு காணப்படும் வழக்குகளில், வரி செலுத்துவோரின் அபராதம், வட்டி மற்றும் வழக்குச் செலவு ஆகியவை தள்ளு படி செய்யப்படும். எனினும், மறைக்கப்பட்ட வெளிநாட்டு வருமானம் மற்றும் கொடிய பொருளாதார குற்றங்களுக்கு இது பொருந்தாது.

வழக்குகளுக்கு தீர்வு

முதல்முறையாக, 2020ம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 1.46 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 54,000 கோடி ரூபாய், அரசுக்கு வரி வருவாயாக கிடைத்தது. 'விவாத் சே விஸ்வாஸ்' திட்டம் அறிமுகமாவதற்கு முன், நேரடி வரி தொடர்பாக பல்வேறு தீர்ப்பாயங்கள், நீதிமன்றங்களில் 4.96 லட்சம் கோடி ரூபாய் தொடர்புடைய, 4.83 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !