மத்திய அரசிடம் ஓராண்டு; மாநில அரசிடம் ஓராண்டு நிதியுதவி கோரி தவிக்கும் அப்பள நிறுவனங்கள்
சென்னை:மதுரையில், அப்பள தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, அங்கு நவீன இயந்திரங்களை உள்ளடக்கிய தொழில், குழும பொது வசதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளன. இதற்கு, தமிழக அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து ஓராண்டாக காத்திருக்கின்றன. இதுகுறித்து, தமிழக அப்பளம், வடகம், மோர் வற்றல் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் திருமுருகன் கூறியதாவது:தமிழகத்தில் அப்பளம் தயாரிப்பில், 7 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அதில், 90 சதவீதம் பேர் பெண்கள். தற்போது, பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், இந்த தொழிலில் களமிறங்கி வருவதால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, பாரம்பரியமாக அப்பளம் தயாரிப்பில் ஈடுபடுவோர், பெரிய நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, பொது வசதி மையம் அமைக்க உள்ளோம். இதற்காக, மதுரை மாவட்டம், விராகனுாரில், 10 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டது. அங்கு நவீன இயந்திரங்கள் நிறுவ, மத்திய அரசிடம் இரண்டு ஆண்டுக்கு முன் நிதியுதவி கோரப்பட்டது. ஓராண்டிற்கு பின், மாநில அரசிடம் நிதியுதவி கோர, மத்திய அரசு அறிவுறுத்தியது. எனவே, தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை ஆணையரகத்தில் நிதியுதவி கோரப்பட்டது. மத்திய அரசிடம் ஓராண்டு, தமிழக அரசிடம் ஓராண்டு என காத்திருந்தும் இதுவரை வசதி மையம் அமைக்க நிதியுதவி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தயாராகிறது
l தமிழக அப்பள தயாரிப்பு தொழிலில், 1,000 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகிறதுl தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு, 350 கோடி ரூபாய்க்கு அப்பளம் ஏற்றுமதியாகிறது.