டிஷ்யு பேப்பர் தொழில்நுட்பம் ஜெர்மனி செல்லும் அதிகாரிகள்
சென்னை:'டிஷ்யு பேப்பர்' தயாரிப்புக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிந்துவர, டி.என்.பி.எல்., அதிகாரிகள் குழு, ஜெர்மனி சென்றுள்ளது.டி.என்.பி.எல்., எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியில் ஆண்டுக்கு, 34,000 டன் டிஷ்யு பேப்பர் உற்பத்தி செய்யும் திறனில் ஆலை அமைக்க உள்ளது. திட்டச் செலவு, 300 கோடி ரூபாய். இங்கு சர்வதேச தரத்தில், 11 ஜி.எஸ்.எம்., முதல் 42 ஜி.எஸ்.எம்., டிஷ்யு பேப்பர் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் டி.என்.பி.எல்., நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு, 4.40 லட்சம் டன் அச்சு மற்றும் எழுது காகிதம் தயாரிக்கும் திறனிலும்; திருச்சி மணப்பாறை அருகில் மொண்டிப்பட்டியில், ஆண்டுக்கு, 2 லட்சம் டன் திறனில் காகித அட்டை தயாரிக்கும் ஆலைகளும் உள்ளன.இந்த ஆலைகளில் தயாரிப்பை நவீனப்படுத்த ஜெர்மனி நாட்டில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.அவற்றை விற்ற நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்க, டி.என்.பி.எல்., அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்பேரில், கரூர் ஆலையில் இருந்து அதிகாரிகள் குழு, ஜெர்மனி சென்றுள்ளது.அக்குழு, அந்நாட்டில் டிஷ்யு பேப்பர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பத்தை அறிந்து வந்து, திருச்சியில் அமைக்கப்படும் ஆலையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.