வர்த்தக துளிகள்
ரூ.1,100 கோடி ஐ.பி.ஓ., வருகிறது
ரவி இன்ப்ராபில்ட் புராஜெக்ட்ஸ்ராஜஸ்தானின் உதய்ப்பூரை பதிவு அலுவலகமாக கொண்ட ரவி இன்ப்ராபில்ட் புராஜெக்ட்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,100 கோடி ரூபாய் திரட்ட, சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. நாடு முழுதும் நெடுஞ்சாலை, ரோப்வே, ரயில்வே துறைக்கான கட்டுமான திட்டங்களை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், முற்றிலும் புதிய பங்கு விற்பனை வாயிலாக முதலீட்டை திரட்ட உள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையை, கடன்களை திருப்பி செலுத்துவதுடன், உபகரணங்களை வாங்கவும், துணை நிறுவனங்களின் கடனை அடைக்கவும் பயன்படுத்த உள்ளதாக, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துடன் முதல் சுற்று பேச்சு நிறைவு
புதுடில்லி: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா -- நியூசிலாந்து நாடுகள் இடையேயான முதல் சுற்று பேச்சு நேற்றுடன் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மார்ச் மாதத்தில் இருதரப்பும் பேச்சு துவங்க முடிவு செய்தன. இைதயடுத்து, கடந்த 5ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெற்ற பேச்சில், வரிக்குறைப்பு, பால் பொருட்கள் வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஜவுளி, மருந்து பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், வேளாண் இயந்திரங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இறைச்சி, ஒயின் உள்ளிட்ட பொருட்களுக்கு, வரிச்சலுகையை நியூசிலாந்து எதிர்பார்க்கிறது.