உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்:

வர்த்தக துளிகள்:

'பால்வள துறை வளர்ச்சி 13 சதவிகிதம்

இந்திய பால்வள துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 11 முதல் 13 சதவிகதமாக இருக்கும் என, 'கிரிசில்' அமைப்பு தெரிவித்துள்ளது. புரதச்சத்து கொண்ட பொருட்களுக்கான நுகர்வோர் தேவை அதிகரிப்பு, சில்லரை விற்பனை விலை உயர்வு மற்றும் சீஸ், தயிர், பனீர் பொருட்களுக்கான வலுவான தேவை ஆகியவை, இதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் அதிகம்

இந்தியாவின், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் உயர்ந்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவு நிறுவனமான கெப்லர் தெரிவித்துஉள்ளது. இந்தியாவின் ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த மே மாதத்தில், 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு நாளொன்றுக்கு 19.6 லட்சம் பீப்பாய்களாக உயர்ந்திருந்தது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 51 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதில் ரஷ்யா மிகப்பெரிய அளவாக, 38 சதவீதம் கச்சா எண்ணெயை வினியோகம் செய்கிறது.

அமேசான் ரூ.5 கட்டண வசூல்

அமேசான் இந்தியா நிறுவனம் அனைத்து விதமான பயனர்கள் மற்றும் ஆர்டர்களுக்கும், சரிசமமாக 5 ரூபாய் பிளாட்பார்ம் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொகை திருப்பி வழங்கப்படாது. பிளிப்கார்ட், பிளாட்பார்ம் கட்டணமாக 3 ரூபாய் வசூலித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கட்டணம், தற்போது பெரும்பாலான இ - காமர்ஸ் மற்றும் குயிக் காமர்ஸ் தளங்களில் கட்டாயமானதாகிவிட்டது.

பயோகான் நீரிழிவு நோய் மருந்து

பயோடெக் நிறுவனமான பயோகானின், நீரிழிவு நோய்க்கான பொதுவான மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் லிராகுளுடைடு மருந்து பொருள் தயாரிப்புக்கான ஒப்புதலை பெற்றுள்ளதாக பங்கு சந்தையிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பை பங்கு சந்தையில் பயோகான் பங்குகள் 0.81 சதவீதம் உயர்ந்து, 336.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

டி.சி.எஸ்., - விர்ஜின் அட்லான்டிக் கூட்டு

பிரிட்டனைச் சேர்ந்த 'விர்ஜின் அட்லான்டிக்' நிறுவனத்துடனான கூட்டாண்மையை, டி.சி.எஸ்., நிறுவனம் மேலும் ஏழு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தத்தின் வாயிலாக, ஏ.ஐ., தீர்வுகளைக் கொண்டு விர்ஜின் அட்லான்டிக்கின் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்த, இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இ.பி.எப்.ஓ., கால அவகாசம் நீட்டிப்பு

இ.பி.எப்.ஓ., எனும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், யு.ஏ.என்., எண்ணை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவைஇம்மாத இறுதி வரை மீண்டும் நீட்டித்துள்ளது. பணியாளர்கள், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற யு.ஏ.என்., செயல்பாட்டில் இருப்பது அவசியமாகும். யு.ஏ.என்., எண்ணுடன் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை