வர்த்தக துளிகள்
புதிய பங்கு வெளியீடு வாயிலாகதிரட்டப்படும் நிதி 45% அதிகரிப்பு
உலகளாவிய வர்த்தக ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும், நடப்பாண்டின் முதல் அரையாண்டில் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட்ட நிதி கடந்தாண்டைக் காட்டிலும் 45 சதவீதம் அதிகரித்து, 45,351 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வணிக வங்கியாளர்கள் தரவுகளின்படி, 24 நிறுவனங்கள் வாயிலாக இந்நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 36 நிறுவனங்கள், 31,281 கோடி ரூபாயை திரட்டியிருந்தன. எச்.டி.பி., பைனான்சியல் சர்வீசஸ், ஹெக்ஸாவேர் டெக்னாலஜி மற்றும் ஏத்தர் எனர்ஜி ஆகியவை இப்புதிய பங்கு வெளியீட்டில் இடம்பெற்ற முக்கிய நிறுவனங்களாகும்.
ரூ.5,524 கோடியை திரும்ப பெற்ற அன்னிய பங்கு முதலீட்டாளர்கள்
அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், இம்மாதம் 18ம் தேதி வரையிலான நிலவரப்படி, 5,524 கோடி ரூபாய் நிகர மதிப்பிலான பங்குகளை விற்று, தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, நடப்பாண்டில் இதுவரை திரும்பப் பெற்ற முதலீட்டுத் தொகை 83,245 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக டிபாசிட்டர்களின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஜூன், மே, ஏப்ரல் என கடந்த மூன்று மாதங்களில் முறையே 14,590 கோடி, 19,860 கோடி, 4,223 கோடி ரூபாய் நிகர முதலீடு தொடர்ந்த நிலையில், தற்போது முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். இதற்கு முன், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் முதலீட்டை திரும்ப பெற்றிருந்தனர்.
, 3,558 போலி நிறுவனங்களை கண்டுபிடித்த ஜி.எஸ்.டி., பிரிவு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில், 3,558 போலி நிறுவனங்கள் மற்றும் 15,851 கோடி ரூபாய்க்கான போலி வரி உள்ளீட்டு பயன் கோரிக்கைகளை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 29 சதவீதம் அதிகமாகும். இக்காலகட்டத்தில், 53 பேர் கைது செய்யப்பட்டு, 659 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 3,840 போலி நிறுவனங்களுடன் 12,304 கோடி ரூபாய் போலி வரி உள்ளீட்டு பயன் கோரிக்கைகள் கண்டறியப்பட்டன. இதில் 26 பேர் கைது செய்யப்பட்டு, 549 கோடி ரூபாய் மீட்கப்பட்டது.
பெட்ரோல் நிலையங்களிலேயே பயோகாஸ் உற்பத்தி செய்யலாம்'
நாடு முழுதும் உள்ள பெட்ரோல் பம்ப் முகவர்கள், பெட்ரோல் நிலையங்களில் உள்ள 150 முதல் 200 அடி காலி இடங்களை பயன்படுத்தி, சொந்தமாகவே இயற்கை எரிவாயுவான 'கம்ப்ரஸ்டு பயோகாஸ்' உற்பத்தி செய்ய முடியும். இதற்காக ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு 5 முதல் 6 கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். பயிர் கழிவுகள், நகராட்சி மற்றும் வீட்டுக் கழிவுகளை பயன்படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்ய இயலும் என அகில இந்திய பெட்ரோல் முகவர்கள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. இதன் வாயிலாக நாட்டின் துாய்மை எரிசக்தி உற்பத்திக்கு உதவுவதுடன், நாட்டின் எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும் உதவலாம் என மேலும் தெரிவித்துள்ளது.