வர்த்தக துளிகள்
'உரங்களின் தவறான: பயன்பாடு தடுக்கப்படும்': உ ரங்களின் தவறான பயன்பாட்டை தடுக்கவும், பயிர்களுக்கு தேவையான அளவில் மட்டும் உரங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும், மத் திய அரசு நடவடிக்கை எடுக்கும் என, மத்திய உரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்கு உரங்கள் மடைமாற்றம் செய்யப்படுவதை தடுக்க, பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அவர் கூறினார். விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியே அரசின் கொள்கைகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தடையின்றி வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஜவுளித்துறை நிதிநிலை: ஆய்வு நடத்த அரசு திட்டம்: நாட்டின் ஜவுளித்துறை நிதிநிலை குறித்த விரிவான ஆய்வை, மத்திய அரசு அடுத்த ஆண்டு நடத்த உள்ளது. அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் இத்துறையின் செயல்பாடுகள் குறித்த தரவுகள் குறைவாகவும் பரவலாகவும் உள்ளதால், பிரச்னைகள், தேவைகள் குறித்த தகவல் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் ஜவுளித்துறையின் உற்பத்தி, கூலி ஆகிய தரவுகளே அதிகம் திரட்டப்பட்டன. ஆனால், அத்துறையினருக்கு எந்தளவுக்கு நிதியுதவி கிடைக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் அதிகம் இல்லை. இந்நிலையில், ஜவுளித்துறையின் நிதிநிலை, வேலைவாய்ப்பு நிலவரம், சந்தை ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்ள, மத்திய அரசு 2027ல் விரிவான ஆய்வை நடத்த உள்ளது. புதிய சந்தாதாரர் சேர்ப்பு: ஜியோ முதலிடம்: ரி லையன்ஸ் ஜியோ நிறுவனம், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் புதிதாக 13.90 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்து, ஒயர்லெஸ் சந்தாதாரர் சேர்க்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக, ஏர்டெல் நிறுவனத்தைக் காட்டிலும் ஜியோ அதிக சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒயர்லெஸ் சந்தாதாரர் எண்ணிக்கை என்பது, மொபைல் டேட்டா மற்றும் வை - பை பயனர்களை உள்ளடக்கியது. அதே சமயம், கடனில் சிக்கித்தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், கடந்தாண்டு நவம்பரில் 10.10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. சுங்க வரி வசூல்: ஏழு சதவீதம் சரிவு: ந டப்பு நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில், சுங்க வரி வசூல் 7 சதவீதம் சரிவை கண்டிருப்பதாக அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், சுங்க வரி 1.54 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இது 1.43 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. சி.ஜி.எஸ்.டி., வசூலும், இதே காலத்தில், 5.40 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 10.90 சதவீதத்தை விட குறைவு. அதே நேரம், நடப்பு நிதியாண்டின் இதே காலத்தில், உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரி வசூல் 9.30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் எரிபொருள் பயன்பாடு வலுவாக இருப்பதை உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.