முடிவுக்கு வராத ஒப்பந்தம்: இந்தியாவுக்கு வரி நிச்சயம்
வாஷிங்டன்: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக நிறைய பேச்சு நடத்த வேண்டியது அவசியம் என, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாகவில்லையெனில், ஆக., 1 முதல் ஏற்கனவே அறிவித்த 26 சதவீத வரி விதிப்பு அமலாகும் என அமெரிக்க அதிபர் டி ரம்ப் அறிவித்து இருந்தார். கடந்த வாரம் அமெரிக்கா சென்ற இந்திய அதிகாரிகள் குழு, ஐந்தாவது கட்ட பேச்சு நடத்தியது. இருப்பினும், இந்தியா - -அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் தாமதம் நீடித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கூடுதல் பேச்சு நடத்த வேண்டி உள்ளது. இந்தியா வரலாற்று ரீதியாக உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்கும் கொள்கையை பின்பற்றுகிறது. இதனை குறைக்கும் எந்தவொரு நடவடிக்கையும், தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து இந்திய தரப்புடன் பேசி வருகிறோம். எப்போதும் போல், இருதரப்பும் மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு, வரும் ஆக., 25ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆறாவது கட்ட பேச்சில், ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.