யூரியா இறக்குமதி ஏழு மாதங்களில் இருமடங்கானது
புதுடில்லி: கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, நாட்டின் யூரியா இறக்குமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து உரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் ஏழு மாதங்களில், 58.62 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதியான 24.76 லட்சம் டன் யூரியாவை விட இது இரண்டு மடங்கு அதிகம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேலும் 17.50 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட உள்ளது. எனவே, நாடு முழுதும் காரிப் பருவ சாகுபடிக்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாது. காரிப் பருவ சாகுபடிக்கு 185 லட்சம் டன் யூரியா தேவை என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், கையிருப்பு 230 லட்சம் டன்னாக உள்ளதால், பற்றாக்குறை எழ வாய்ப்பில்லை. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.