உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க வரிவிதிப்பு! தேங்கி கிடக்கும் ரூ.18,700 கோடி இறால்; நிதியுதவி கேட்கும் ஏற்றுமதியாளர்கள்

அமெரிக்க வரிவிதிப்பு! தேங்கி கிடக்கும் ரூ.18,700 கோடி இறால்; நிதியுதவி கேட்கும் ஏற்றுமதியாளர்கள்

புதுடில்லி; இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பால், கிட்டத்தட்ட 18,700 கோடி ரூபாய் மதிப்பிலான இறால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; இந்த சூழலில், மத்திய அரசு நிதியுதவி செய்ய முன்வர வேண்டும் என்றும், இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு காரணமாக 18,700 கோடி ரூபாய் மதிப்பிலான இறால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் 30 சதவீதம் கூடுதலாக, மூலதன கடன் வழங்க வேண்டும். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்த 8 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். இந்தியாவை காட்டிலும் சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு குறைவாக வரி விதிக்கப்பட்டுள்ளதால், நம் நாட்டு கடல் உணவுப் பொருட்களின் போட்டித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகள் தங்களது ஏற்றுமதியின் விலையை மேற்கொண்டு குறைத்து, இந்திய ஏற்றுமதியாளர்களின் சந்தையை கைப்பற்ற முயற்சித்து வருகின்றன. ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள பொருட்களை வழி மாற்றினால், 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால், அதுவும் செய்ய முடியாது. புதிய சந்தைகளுக்கு உடனடியாக ஏற்றுமதி செய்வது இயலாத காரியம். நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், இதற்கு சில காலம் ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'மாற்று சந்தைகள் ஏராளம்' அமெரிக்க வரி விதிப்பு ஏற்படுத்தியுள்ள சவாலை, இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஐரோப்பிய யூனியன், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன், மதிப்பு கூட்டல் மற்றும் பேக்கேஜிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி