ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (4)
ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர்.அதன்விவரம், திங்கள் தோறும் 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
போர்வெல் தொழிலை துளைத்தெடுக்கும் அதீத வரி
மதுரை மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் சங்கம், முறையாக பதிவு செய்து 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாட் வரிவிதிப்பில், போர்வெல் தொழிலுக்கு பிரிவு '66டி' ன் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 2018 ஜூலை 21ல் நடந்த 28வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் போர்வெல் தொழிலுக்கு அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையே தொடரும் (ஸ்டேட்டஸ் குவோ) எனக் கருதி, புதிதாக யாரிடமும் மனு செய்யவில்லை.ஆனால், தற்போது அதிகாரிகள் எங்களை, 18 சதவீதம் வரி கட்டச் சொல்லி வற்புறுத்துகின்றனர். போர்வெல் தொழிலில், 70 சதவீதம் டீசலுக்கே செலவாகிறது. டீசல் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வருவதில்லை. வாட் வரிவிதிப்புக்கு உட்பட்டது என்பதால், எங்களால் ஐ.டி.சி., (உள்ளீட்டு வரி) எடுக்க முடிவதில்லை.பொதுமக்களின் வீட்டுக்கான குடிநீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளுக்கு போர்வெல் அமைத்துத் தரும் பணிகளைச் செய்கிறோம். போர்வெல் அமைத்தால் தண்ணீர் நிச்சயம் வரும் எனக் கூற முடியாது; ஒன்றுக்கும் மேற்பட்ட போர்கள் அமைக்க வேண்டி இருக்கிறது. இதனால் நட்டம் ஏற்படும்.பொதுமக்களும் விவசாயிகளும் எங்களுக்கு ஜி.எஸ்.டி., தருவதில்லை. வாடிக்கையாளரிடம் ஜி.எஸ்.டி., வாங்காமல், 18 சதவீத ஜி.எஸ்.டி., கட்டுவது இயலாத காரியம். ரூ.100 வருமானம் வந்தால், 70 சதவீதம் எரிபொருளுக்கு செலவாகிறது. 10 சதவீதம் வேலையாட்களுக்கு சம்பளம். 10 சதவீதம் காப்பீடு மற்றும் தேய்மான செலவு. மீதமுள்ள 10 சதவீதத்தில் நாங்கள் வருமான வரியும், வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட வேண்டும்.இச்சூழலில் எப்படி எங்களால் 18 சதவீத வரி கட்ட முடியும்? 50வது மற்றும் 53வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் சில தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஜி.எஸ்.டி., பதிவு செய்து, முறையாக அரசுக்கு வரி செலுத்தத் தயாராகவே உள்ளோம். இத்தொழிலை நம்பி 2.5 லட்சம் குடும்பங்கள் உள்ளன.2018ல், ஜி.எஸ்.டி., கமிஷனரிடம் கேட்டதற்கு, போர்வெல் தொழிலுக்கு ஜி.எஸ்.டி., பற்றி தெளிவாகக் கூறவில்லை. தற்போது கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். இது நியாயமற்றது. போர்வெல் தொழிலை 5 சதவீத ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மேலும், ஜி.எஸ்.டி., அமலாக்கப்பட்ட காலத்தில் பிறகான காலத்துக்கு, ஒரு முறை பொதுமன்னிப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.-சுரேஷ், துணைத்தலைவர், தமிழ்நாடு போர்வெல் உரிமையாளர்கள் சம்மேளனம்.ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும். முகவரி:ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.Email: dinamalar.in