மாறும் முதலீட்டாளர்களின் மனநிலை மல்டி அசட் பண்டுகளுக்கு வரவேற்பு
மு தலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நம்புவது வழக்கம் என்றாலும், தற்போது அவர்களின் மனநிலையும் சற்று மாறியிருப்பது, மியூச்சுவல் பண்டு அசோசியேஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த அக்டோபரில், மல்டி அசட் பண்டுகளில் முதலீடு 7 சதவீதம் அதிகரித்துள்ள அதேவேளையில், கோல்டு இ.டி.எப்.,களில் முதலீடு 7 சதவீதம் குறைந்திருக்கிறது. தங்கம் விலை தொடர் உச்சத்தில் இருப்பதும், பங்குகளின் விலை அதிக மதிப்பீடுடன் இருப்பதும், முதலீட்டாளர்களின் மனநிலை மாறுவதற்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ரிஸ்க்குகளை பரவலாக்கும் விதமாக, ஒரே திட்டத்தை தேர்வு செய்யாமல், மல்டி அசட் பண்டுகளை நாடுவதாகவும் கூறுகின்றனர். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நிராகரிப்பதாக அர்த்தம் இல்லை என்றும்; ஒரே பண்டில், ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், தங்கம் என பரவலான முதலீட்டு வாய்ப்பு கிடைப்பதால், அதை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் நிபுணர்களின் கருத்து. கோல்டு இ.டி.எப்.,களுடன் ஒப்பிடுகையில், மல்டி அசட் பண்டுகளுக்கு வரிவிதிப்பும் குறைவு. பல வழிகளில் சாதகமாக இருப்பதும் முதலீடுகள் மாறக் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 'மல்டி அசட் அலகேஷன் பண்டு'கள் சராசரியாக 16.73 சதவீத வருவாயை கொடுத்துள்ளன. அதேநேரம், தங்கம் சார்ந்த பண்டுகள் அல்லது இ.டி.எப்.,கள் சராசரியாக 31.84 சதவீதம் வருவாயை கொடுத்துள்ளதாக, 'வேல்யூ ரிசர்ச்' நிறுவன தரவுகள் கூறுகின்றன.