உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஃபோரக்ஸ்: ஆர்.பி.ஐ., தலையீட்டால் நிலைத்து நின்ற ரூபாய்

 ஃபோரக்ஸ்: ஆர்.பி.ஐ., தலையீட்டால் நிலைத்து நின்ற ரூபாய்

ரிசர்வ் வங்கி எதிர்பாராதவிதமாக ரெப்போ வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்தது. பொதுவாக, வட்டி விகிதங்கள் குறைக்கப்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை திரும்பப் பெறுவர். இது ரூபாய் மதிப்பை பலவீனமாக்கும். ஆனால், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டும், ரூபாய் மதிப்பு பெரிய அளவில் சரியாமல் நிலைத்து நின்றது. இதற்கு, ரூபாய் மதிப்பு 90.00 என்ற முக்கியமான எல்லையை கடந்துவிடாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, சந்தையில் டாலரை விற்று, அதன் விலையை நிலைநிறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து டிசம்பர் மாதத்தின் இதுவரையிலான நாட்களில் 1,352 மில்லியன் டாலர் தொகையை திரும்ப பெற்றுள்ளனர். இது, டாலருக்கான தேவையை அதிகரித்து, ரூபாய் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா -- -அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது, சந்தையின் நம்பிக்கையைச் சற்றே குறைத்துள்ளது. அதேநேரம், அமெரிக்க பெடரல் வங்கி, அடுத்த வாரம் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், டாலர் பலவீனமடைந்தால், அது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு ஆதரவும் அளிக்கும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் 90.00 என்ற எல்லையில் இருந்து பின்வாங்கியுள்ளது. 89.80க்கு கீழிறங்கினால், அது ரூபாய் மீட்சியின் முதல் அறிகுறியாக இருக்கலாம். மாறாக, 90.50க்கு மேல் சென்றால், அழுத்தம் மீண்டும் துவங்கி, 90.80 என்ற நிலையை நோக்கி சரிய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை