உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஃபோரக்ஸ்: ரூபாயின் ஊசலாட்டம் தொடரலாம்

ஃபோரக்ஸ்: ரூபாயின் ஊசலாட்டம் தொடரலாம்

ரூபாய் திங்களன்று 88.80 என்ற அளவில் இருந்த நிலையில், செவ்வாய் கிழமை 88.70 என்ற வலுவான நிலையில் நிறைவடைந்தது. இதற்கு முக்கிய காரணம், இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் தலையிட்டு, ரூபாயின் மதிப்பை உறுதிப்படுத்தியது என்பதாகத் தெரிகிறது. நம் நாட்டை பொறுத்தவரை உள்நாட்டு வளர்ச்சி வலுவாக உள்ளது. அக்டோபரில் இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி 59.20 ஆக உயர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. அக்டோபரில் ஜி.எஸ்.டி ., வசூலும் 4.60% அதிகரித்துள்ளது. பங்கு சந்தையில் புதிய பங்கு வெளியீடுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை, டிரம்ப் விதித்த வரிகளின் சட்ட பூர்வமான தன்மை குறித்து, அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த புதன்கிழமை விசாரிக்க உள்ளது. வர்த்தகப் பதற்றங்கள் தொடரும் என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் உற்பத்தித் துறை வேகம் குறைகிறது என்பதை அண்மை தரவுகள் காட்டுகின்றன. அரசாங்கத்தின் நிதி முடக்கம் காரணமாக, லட்சக்கணக்கான ஏழை அமெரிக்கர்களுக்கான உணவு உதவி தாமதமாகி, வாஷிங்டனில் அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது. கணிப்பு குறுகிய காலம்: அமெரிக்க டாலரின் உலகளாவிய பலம் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு 88.50 -89.10 வரம்பிற்குள் ஊசலாடலாம். நீண்ட காலம்: இந்தியா--அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்து, ரூபாயின் மதிப்பு 88.40 என்ற முக்கிய நிலையை உடைத்து கீழே சென்றால், அதாவது ரூபாய் வலுவடைந்தால், 87.70 - 87.50 வரையிலான உயர்வை நோக்கி செல்லக்கூடும். அமித் பபாரி,நிர்வாக இயக்குநர்,சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ