பஜாஜ் பின்சர்வ், இந்தியாவில் இயங்கிவரும் மிகப்பெரிய நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். இது, 'பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ், வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஏ.எம்.சி., உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனம் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், வரும் 2030ம் நிதியாண்டுக்குள், 22 கோடி வாடிக்கையாளர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.
சமீபத்திய நிதிச் செயல்திறன்: 2025 - 26 நிதியாண்டு இரண்டாவது காலாண்டு. பஜாஜ் பைனான்ஸ்: நிகர வட்டி வருமானம் கடந்த காலாண்டை விட 5.50 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செயல்பாட்டு செலவுகளைக் கழித்த பின் வரும் வருவாய், மற்றும் வரிக்குப் பிந்தைய வருவாய் ஆகியவை, கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் முதல் 23 சதவீதம் வரை வளர்ச்சியை கண்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ., பிரிவில் சில அழுத்தங்கள் இருந்தாலும், கடனுக்கான செலவுகள் வழிகாட்டுதலுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஜெனரல் இன்சூரன்ஸ்: மொத்த பிரீமியம் வளர்ச்சி 9 சதவீதம் ஆக உள்ளது. இதற்கு மோட்டார் வாகன இன்சூரன்ஸ் மற்றும் தீ விபத்து இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியே காரணம். நஷ்ட விகிதம் 390 புள்ளிகள் குறைந்து, 75.80 சதவீதமாக உள்ளது. இருப்பினும், புதிய வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால், ஒட்டுமொத்த விகிதம் 101 முதல் 102 சதவீதத்தை எட்டியுள்ளது.
லைப் இன்சூரன்ஸ்: புதிய பாலிசிகளின் விற்பனை எண்ணிக்கை 2 சதவீதம் சரிவைக் கண்டிருந்தாலும், அதிக லாப வரம்பு கொண்ட திட்டங்களில் கவனம் செலுத்தியதால், புதிய பாலிசிகளின் லாப வரம்பு மதிப்பு 630 புள்ளிகள் அதிகரித்து 17.10 சதவீதமாக உயர்ந்தது. அதிக பாலிசிகளை விற்பதை விட, அதிக லாபம் தரக்கூடிய மற்றும் அதிக பாதுகாப்பை வழங்கக்கூடிய பாலிசிகளை உருவாக்குவதற்கே நிறுவனம் தற்போது முக்கியத்துவம் அளிக்கிறது. குழும இலக்குகள்: நிறுவனத்தின் தற்போதைய ஆர்.ஓ.இ., எனும் ரிட்டர்ன் ஆன் ஈக்விட்டி 12 - 14 சதவீதம் வரை உள்ளது. இது 2030-ம் நிதியாண்டில் 18 - 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2030ம் நிதியாண்டுக்குள், குழுமம் தனது லாபத்தை இரட்டிப்பாக்கவும், வாடிக்கையாளர்களுடன் நீண்டகால வலுவான உறவை ஏற்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரிஸ்க்கைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. வியூகம்: பஜாஜ் பின்சர்வ் குழுமத்தில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக பஜாஜ் பைனான்ஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நிதியாண்டும் 17 - 19 சதவீதம் வரை நிலையான வளர்ச்சியை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2030-ம் நிதியாண்டுக்குள் 20 - -22 கோடி வாடிக்கையாளர்களை உருவாக்கவும், மொத்த கடன் சந்தையில் 3 - 3.5 சதவீத சந்தைப் பங்கைப் பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு 6.5 முதல் 7.5 சேவைகளை வழங்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தனது உத்தியை, தயாரிப்பை மையப்படுத்திய மாடலில் இருந்து வாடிக்கையாளரை மையப்படுத்திய மாடலுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. கடன் வழங்குவதற்காக எப்.ஐ.என்.ஏ.ஐ., என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, கடன் வழங்குவதற்கான செலவை 15 முதல் 20 புள்ளிகள் வரை குறைக்கவும், கடன் வழங்குவதற்கான செயல்பாட்டை 12 - 15 சதவீதம் வரை வேகப்படுத்தவும் முடியும். மேலும், செலவினத்துக்கும் வருமானத்துக்கும் இடையே உள்ள விகிதத்தை, 31 சதவீதமாகக் குறைக்க நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இன்சூரன்ஸ் இலக்கு
ஜெனரல் இன்சூரன்ஸ்: ஒட்டுமொத்த விகிதத்தை 100 சதவீதத்துக்கும் கீழே குறைக்க நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஆர்.ஓ.இ., விகிதத்தை 16 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது. லைப் இன்சூரன்ஸ்: காப்பீடு பாலிசிகளின் பங்களிப்பை 4 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆண்டு பிரீமியம் மதிப்பு அடிப்படையில் இந்தத் துறையின் சராசரியைக் காட்டிலும், இரண்டு மடங்காக வளர நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய தொழில்நுட்பம்: பஜாஜ் பின்சர்வ் நிறுவனம், பஜாஜ் மார்க்கெட்ஸ் ஹெல்த் மற்றும் ஏ.எம்.சி., போன்ற புதிய தளங்களிலும் முதலீடு செய்து வருகிறது. இவை தற்போது நஷ்டத்தில் இயங்கினாலும், 2030-ம் ஆண்டுக்குள் சரியான அளவில் வளர்ந்தால், குழுமத்துக்கு நல்ல மதிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும். நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளின் உதவியால், தனது கிளைம் மற்றும் கலெக்ஷன் செயல் முறைகளைச் சிறப்பாக மேம்படுத்தி வருகிறது. இந்த செயல்பாட்டுத் திறன்கள், பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தத் துறையைக் காட்டிலும் வேகமான வளர்ச்சியை கொடுக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. மொத்தத்தில், பஜாஜ் பின்சர்வ் குழுமம், அதன் அதிக லாபம் ஈட்டும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் உறுதியான வளர்ச்சி, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாப வரம்பு சார்ந்த புதிய உத்திகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளினால், 2030-ம் ஆண்டில் தனது சந்தைப் பங்கை அதிகரிக்கவும், வருமானத்தை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது. பொறுப்பு அறிக்கை இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்