தங்கம், வெள்ளி: தவறான சுழற்சியில் சிக்காதீர்கள்!
இத்தனை ஆண்டுகளாக வெள்ளி பற்றி யாருமே அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அதுவும் கடந்த வாரம், சர்வதேச சந்தையில், வெள்ளி ஒரு அவுன்ஸ் விலை 51.24 டாலரைத் தொட்டவுடன், பரபரப்பு அதிகமாகிவிட்டது. இதுபோல், வெள்ளி அதன் வரலாற்றிலேயே இரண்டு முறைதான் உச்சத்தைத் தொட்டது. அதனால், இனி விட்டால் பிடிக்க முடியாதோ என்ற அவசரத்தில், பலரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கின்றனர். அது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன், வரலாறை ஒருமுறை பார்த்துவிடுவோம். 1980, 2011 ஆகிய ஆண்டுகளில், வெள்ளி ஒரு அவுன்ஸ் 40 டாலருக்கு மேல் விற்பனையானது. இப்போது மூன்றாவது முறை. சரி, எப்போதெல்லாம் வீழ்ச்சி அடைந்தது? கடந்த 1980 முதல் 1982 வரையான காலத்தில், 49 டாலரில் இருந்து 4.93 டாலருக்கு விழுந்தது. அதாவது, 90 சதவீத சரிவு. பின், 2011 - 2012ல் 48ல் இருந்து 31 டாலர்; 35 சதவீத வீழ்ச்சி. ஒவ்வொரு முறை வெள்ளி உச்சம் தொடும்போதும், அடுத்து வரும் காலத்தில் கடுமையான வீழ்ச்சியையும் சந்தித்து உள்ளது. தங்கமும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுருக்கிறது. ஆனால், அது மனை, வீடு போல் நிரந்தரமான சொத்தாகத் தான் பார்க்கப்படுகிறதே தவிர, வர்த்தகத்துக்கான பொருளாகப் பார்க்கப் படுவதில்லை. தங்கம் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 1980 முதல் 1982 காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம், 850ல் இருந்து 304 டாலருக்கு வீழ்ந்தது; 58 சதவீத சரிவு. 2011 முதல் 2015 காலக்கட்டத்தில் 1,900ல் இருந்து 1,050 டாலருக்கு விழுந்தது; 44 சதவீத சரிவு. பத்திரமானது என்று கருதப்படும் தங்கத்தின் விலையும் விழுந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. அதேபோல், தங்கமும், வெள்ளியும் பல ஆண்டுகள், எந்தவிதமான ரிட்டர்னையும் தராமலும் இருந்துள்ளன. கடந்த 1980 முதல் 2001 வரையான 21 ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ், 850ல் இருந்து 250 டாலராக விலை வீழ்ச்சி கண்டதோடு, ஒவ்வொரு ஆண்டும், மைனஸ் 3.60 சதவீத ரிட்டர்னைத் தான் தந்துள்ளது. மேலும், 2011 முதல் 2018 வரையான ஏழு ஆண்டுகளில் தேக்கம்; 1,930ல் இருந்து 1,300 டாலருக்கு விலை வீழ்ச்சி. வெள்ளியும் இதேபோல் பல ஆண்டுகளுக்கு வருவாயே ஈட்டி தந்ததில்லை. கடந்த 1980 முதல் 2003 வரையான 23 ஆண்டுகால சரிவில், 90 சதவீத விலை வீழ்ச்சி ஏற்பட்டது. 2011 முதல் 2020 வரையான ஒன்பது ஆண்டுகளில், ஒரே நிலையில், அதாவது 15 முதல் 18 டாலர் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த நுாற்றாண்டில் இருந்து பார்க்கும்போது, தங்கத்தின் விலை 61 சதவீத தருணங்களில், ஒன்று மைனஸ் ரிட்டர்ன் கொடுத்திருக்கிறது அல்லது சமமாக இருந்து உள்ளது. வெள்ளியோ, ஒவ்வொரு முறை விலை உயரும்போதும், அடுத்து வரும் காலத்தில் கடுமையான வீழ்ச்சியை அடைந்துள்ளது. ஒரு விஷயம் ஞாபகம் இருக்க வேண்டும். தங்கமும், வெள்ளியும் வருவாய் ஈட்டித்தரும் சொத்துகள் அல்ல. அவை, உங்கள் போர்ட்போலியோவின் காவலர்கள். அதாவது மற்ற சொத்துகளின் மதிப்பு விழும்போது இவை உயர்த்திப் பிடிக்கும். பொதுவாக தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டிகள், 12 முதல் 15 ஆண்டுகள் விலை வீழ்ச்சியைக் காணும்; 2 முதல் 3 ஆண்டுகள் மட்டும் விலை உயரும். தவறான நேரத்தில் இந்தச் சுழற்சியில் போய் சிக்கிக்கொள்ளும் முதலீட்டாளர்கள் வருத்தமும், வேதனையுமே அடைவர். தற்போதைய உலக அளவிலான புவி அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள், மேலும் 20 சதவீத அளவுக்கு உயர்வதற்கான வாய்ப்புண்டு. ஆனால், அவசரப்பட்டு நுழைய வேண்டாம். வரலாறை ஒருமுறை கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.---------------- ஒரு விஷயம் ஞாபகம் இருக்க வேண்டும். தங்கமும், வெள்ளியும் வருவாய் ஈட்டித்தரும் சொத்துகள் அல்ல. அவை உங்கள் போர்ட்போலியோவின் காவலர்கள். அதாவது மற்ற சொத்துகளின் மதிப்பு விழும்போது இவை உயர்த்திப் பிடிக்கும். பொதுவாக தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டிகள், 12 முதல் 15 ஆண்டுகள் விலை வீழ்ச்சியை காணும்; 2 முதல் 3 ஆண்டுகள் மட்டும் விலை உயரும். தவறான நேரத்தில் இந்தச் சுழற்சியில் போய் சிக்கிக்கொள்ளும் முதலீட்டாளர்கள் வருத்தமும், வேதனையுமே அடைவர்.