எனக்கு 56 வயது ஆகிறது. மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எங்கள் குடும்பத்திற்கு மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். எந்த நிறுவனத்தின் மருத்துவக் காப்பீடு சிறந்தது என்பதை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. நிறைய பாலிசிகளில் மறைமுக பிரச்னைகள் இருப்பதாகக் கருதுகிறேன். காப்பீடை விற்பவர்களும் இதுபற்றி முழுமையாக விளக்கம் அளிப்பதில்லை. எனவே, எங்களுக்கு பொருத்தமான காப்பீடு எது என்பது பற்றி மிக விளக்கமாக தெரிவியுங்கள். -கே.பி.ரமேஷ் கோவை. காப்பீடு என்பது 'ஒரே ஒரு தீர்வு' கொண்ட பொருள் அல்ல. ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மாறுபடுகிறது. மருத்துவ காப்பீடில் இரண்டு வகை உள்ளது. முதல் வகை, மருத்துவமனை செலவினத்தை ஈடுசெய்வது. இந்த காப்பீடு, நோய் அல்லது விபத்தால் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவினத்தை ஈடுசெய்கிறது. இதை 'இன்டெம்னிட்டி பாலிசி' என்கின்றனர். இந்த காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். சில நிறுவனங்கள் நீண்டகால திட்டங்களையும் வழங்குகின்றன. நீங்கள் ஒரு க்ளைம் செய்த பிறகும், காப்பீட்டு நிறுவனம் உங்கள் பாலிசியைப் புதுப்பிக்க மறுக்க முடியாது. இரண்டாவது வகை, 'பெனிபிட் பாலிஸி' திட்டம். இது, நோய் உறுதியானவுடன் குறிப்பிட்ட தொகையை ஒரே முறையாக வழங்கும். உதாரணமாக, 10 லட்சம் ரூபாய்க்கு புற்றுநோய் காப்பீடு வைத்திருந்தால், புற்றுநோய் கண்டறியப்பட்டதும் முழுத்தொகையும் வழங்கப்படும். இது சிகிச்சை செலவுடன் தொடர்புடையதல்ல. பணம் வழங்கப்பட்டவுடன் பாலிசி முடிவடையும். இத்தகைய திட்டங்களை, 'கிரிடிக்கல் இல்னெஸ்' அல்லது பெரிய அறுவை சிகிச்சைக்கான பாலிசி என்றும் அழைக்கின்றனர். குறிப்பிட்ட சில நோய்கள் அல்லது அறுவை சிகிச்சைகளுக்கே இது பொருந்தும். பொதுவாக, 20 - 30 வயதிலேயே மருத்துவ காப்பீடு துவங்குவது சிறந்தது. தாமதமானாலும் பரவாயில்லை; துவங்குவது முக்கியம். உங்கள் வயதுக்கு, பல நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு வழங்க தயங்கக்கூடும். இருந்தாலும் மனம் உடைய வேண்டாம். சில நிறுவனங்கள் இந்த வயதுக்குப் பொருத்தமான சிறப்பு திட்டங்களையும் வழங்குகின்றன. இந்தக் காப்பீடில் உங்கள் மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளை சேர்ப்பதில் வயது, பொருளாதார சுயசார்பு, திருமண நிலை போன்ற விதிமுறைகள் இருக்கும். இது, ஒவ்வொரு காப்பீடு நிறுவனத்திலும் மாறுபடும். தேவையெனில், குழந்தைகளுக்கு தனி திட்டமும் எடுக்கலாம். அவர்கள் வருமான வரி செலுத்துவோரானால், அவர்கள் காப்பீடு பிரீமியம் செலுத்தி, வரிச்சலுகை நன்மையைப் பெறலாம். இணையத்தின் வாயிலாக அல்லது உங்கள் காப்பீடு முகவரின் உதவியுடன் சில நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிட்டு, நீங்களே ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதில், என்னென்ன நோய்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, காத்திருப்பு காலம், காப்புறுதி தொகை, அறை வாடகை, பிரீமியம் போன்றவற்றை ஆராய்ந்து காப்பீடு எடுக்க வேண்டும். காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கும் சமச்சீர் மருத்துவமனை காப்பீடு திட்டமான, 'ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசி'யை படிக்கலாம். இதில், உள்ள திட்டத்தை அனைத்து காப்பீடு நிறுவனங்களும் கட்டாயமாக வழங்க வேண்டும். இது தொடர்பான அனைத்து விவரங்களும் இணையத்தில் கிடைக்கும். இது அடிப்படை மருத்துவமனை காப்பீடு மாடல் பாலிசி. இது, உங்கள் தேவைக்கு பொருத்தமானதாக இருந்தால், பல நிறுவனங்கள் இதற்கான பிரீமியத்தை எவ்வாறு நிர்ணயித்துள்ளன என்பதைப் பாருங்கள். இணையத்தில் சில பொது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் வலைதளங்களை பார்வையிடலாம் அல்லது முகவரிடம் உதவி கேட்கலாம். ஒரே காப்பீடு, ஒரே தொகைக்கு, வெவ்வேறு பிரீமியம்களை காண முடியும். உங்களுக்கு தேவையானதைக் கேட்டுப் பெறலாம். -க.நித்ய கல்யாணிகாப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர், பெருநிறுவன வரலாற்றாசிரியர்