மேலும் செய்திகள்
50% வீழ்ச்சியில் எஸ்.எம்.இ., பங்கு வெளியீடுகள்
08-Oct-2026
பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் சூழலில், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளைவிட லார்ஜ்கேப் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு ஒப்பீட்டளவில் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன.இதுபற்றி 'ஜியோபிளாக்ராக் அசட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ரிஷி கோஹ்லி தெரிவித்ததாவது: கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இருந்த சராசரி அளவுகளுடன் ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் பங்குகளின் தற்போதைய மதிப்பு குறைவாக உள்ளது. இருப்பினும், கடந்த கால அளவுகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகவும் குறைந்த மதிப்பில் இருப்பதாக கூற முடியாது. முதலீட்டில் கிடைக்கக்கூடிய வருவாயையும், ஏற்க வேண்டிய இழப்பு அபாயத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, லார்ஜ்கேப் பங்குகள் தற்போது சாதகமான நிலையில் உள்ளன. லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளின் செயல்பாடுகளில் காணப்படும் வேறுபாட்டுக்கு, அவற்றின் லாப வளர்ச்சியும் முக்கிய காரணமாக உள்ளது. மிட்கேப் நிறுவனங்கள் சீரான லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஸ்மால்கேப் பங்குகளும் சமீப மாதங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. லார்ஜ்கேப் நிறுவனங்களின் லாப வளர்ச்சி ஒப்பீட்டளவில் மந்தமாக இருந்துள்ளது. இருப்பினும், ஸ்மால்கேப் பங்குகளுக்கும், லார்ஜ்கேப் பங்குகளுக்கும் இடையிலான மதிப்பீட்டு இடைவெளி அதிகரித்துள்ளது. இது, நடுத்தர காலத்தில் லார்ஜ்கேப் பங்குகளுக்கு சாதகமாக மாறலாம். இருப்பினும், இதனால், ஸ்மால்கேப் பங்குகள் உடனடியாக சரியும் என்றோ, லார்ஜ்கேப் பங்குகள் உடனடியாக உயரும் என்றோ முடிவெடுக்க முடியாது.இந்த சூழலில், தகவல் தொழில்நுட்ப துறையில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இந்திய ஐ.டி., நிறுவனங்கள் ஏ.ஐ., சார்ந்த திட்டங்களில் முன்னேற்றம் கண்டாலும், அதன் வாயிலான வருவாய் இன்னும் குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. இந்த திட்டங்கள், நிறுவனங்களின் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். இதற்கிடையே, லாப விகிதத்தில் நீடிக்கும் பாதிப்பும், பெரிய ஐ.டி., நிறுவனங்களின் மிதமான வளர்ச்சி வாய்ப்புகளும் இத்துறைக்கு சவாலாக உள்ளன. பங்குகளின் விலை குறைந்திருப்பதால் குறுகிய காலத்தில் மீட்சி ஏற்படலாம். ஆனால், நடுத்தர காலத்தில் இத்துறையின் வளர்ச்சி சூழல் இன்னும் சவாலானதாகவே இருக்கும். ஒட்டுமொத்தமாக, சந்தை முழுதும் தொடர்ந்து ஏற்றம் காண்பதைவிட, அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு, முதலீட்டாளர்கள் துறைகளுக்கு இடையே முதலீட்டை மாற்றி அமைக்கும் நிலை நீடிக்கலாம். எனவே, பங்குகளை தேர்வு செய்யும்போது அவற்றின் விலை அல்லது மதிப்பு குறைவாக உள்ளதா என்பதை மட்டும் பார்க்காமல், நிறுவனத்தின் லாப வளர்ச்சி மற்றும் எதிர்கால வருவாய் வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்வது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
08-Oct-2026