சந்தை துளிகள்
'ஈக்விடாஸ் பேங்க்' பங்கு விலை 27% சரிவு 'ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ்' வங்கி தனது வரலாற்றிலேயே மிக சிறந்த இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், வங்கியின் சி.இ.ஓ., வாசுதேவன் திடீரென பதவி விலகியதால், அதன் பங்கு விலை நேற்றைய வர்த்தகத்தில் 17 சதவீதம் வரை சரிந்து 48 ரூபாய் என்ற நிலையை எட்டியது. வர்த்தக முடிவில் 6 சதவீதம் சரிவுடன் 54 ரூபாயில் நிறைவடைந்தது. நேற்று முன்தின வர்த்தகத்தில் 12 சதவீதம் வரை சரிந்ததையும் சேர்த்து கணக்கிட்டால் இதன் பங்கு விலை 27 சதவீதம் வரை பலத்த சரிவை சந்தித்து மீண்டுள்ளது. லாப பதிவால் வீழ்ந்த ஸ்மால்கேப், மிட்கேப் கடந்த நான்கு வர்த்தக தினங்களாக லாபத்தை பதிவு செய்ய நடந்த விற்பனையால், நேற்றைய வர்த்தகத்திலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சரிவை சந்தித்தன. 'சுஸ்லான் எனர்ஜி, ஸ்விக்கி, ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் ஹெச்.எப்.சி.எல்., போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாளில் நான்கு சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சரிந்ததால், 'நிப்டி மிட்கேப் 100 மற்றும் நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடுகள் முறையே 0.60 சதவீதம் மற்றும் 1.24 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. 'பி.எஸ்.இ., - ஐ.டி., குறியீடு' 14.80% வரை உயர்ந்தது பங்கு சந்தையின் முன்னணி குறியீடுகள் மந்தமாக செயல்படும் நிலையில், ஐ.டி., பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நடப்பு அக்டோபர் மாதத்தில் மட்டும் 'பி.எஸ்.இ., -ஐ.டி.,' குறியீடு 14.80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இத்துறை பதிவு செய்துள்ள இரண்டாவது மிகப்பெரிய மாதாந்திர வளர்ச்சியாகும். இதற்கு முன், ஜூலை 2020ம் ஆண்டில் இக்குறியீடு 22.60 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.