உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / எம்.சி.எக்ஸ்., சந்தை மதிப்பு: ரூ.1 லட்சம் கோடியை தொட்டது

எம்.சி.எக்ஸ்., சந்தை மதிப்பு: ரூ.1 லட்சம் கோடியை தொட்டது

எம். சி.எக்ஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, முதன் முறையாக, நேற்றைய வர்த்தகத்தின் இடையே ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிவில் இருந்த நிலையிலும், எம்.சி.எக்ஸ்., பங்கு 3 சதவீதம் உயர்ந்து, 3,940 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும், இப்பங்கு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை சென்செக்ஸ் குறியீடு 1.80 சதவீதம் சரிந்துள்ள நிலையில், எம்.சி.எக்ஸ்., பங்கு 77 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி தொட்ட 52 வார குறைந்தபட்ச விலையான 1,949 ரூபாயிலிருந்து இப்பங்கு 102 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, தினசரி சராசரி வர்த்தக அளவு அதிகரித்திருப்பது, தங்கம், வெள்ளி, எரிசக்தி மற்றும் உலோக பிரிவுகளில் வர்த்தகம் பெருமளவில் அதிகரித்திருப்பது ஆகியவற்றால் இந்நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது.

கணிப்பு

சர்வதேச தரகு நிறுவனமான ‘ஜெப்ரீஸ்’, எம்.சி.எக்ஸ். பங்கிற்கு ‘வாங்கலாம்’ என்ற பரிந்துரையுடன் 4,300 ரூபாய் இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பதால், 2026 முதல் 2029 வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 25 சதவீதமும், வரிக்குமுந்தைய லாபம் 26 சதவீதமும் அதிகரிக்கும் என ஜெப்ரீஸ் கணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ