ப்ரீ - ஐ.பி.ஓ.,வில் பங்கேற்க மியூச்சுவல் பண்டுகளுக்கு தடை
ஐ .பி.ஓ.,வுக்கு முந்தைய நிதி திரட்டலில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் பங்கேற்க செபி தடை விதித்துள்ளது. அதேநேரம், ஒரு ஐ.பி.ஓ.,விற்கு ஆரம்ப அங்கீகாரத்தையும், ஸ்திரத்தன்மையையும் அளிக்கும் 'ஆங்கர்' முதலீட்டு சுற்றில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.ஓ., வெளியிடும் நிறுவனங்களின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் சந்தையில் பணப்புழக்கத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ.,க்களில் மியூச்சுவல் பண்டுகள் மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான மொத்த ஒதுக்கீட்டை, 33 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தி செபி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில், 33 சதவீதம் மியூச்சுவல் பண்டுகளுக்கும், மீதமுள்ள 7 சதவீதம் காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டது. காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியத்துக்கான 7 சதவீத ஒதுக்கீடு முழுமையாக பெறப்படாவிட்டால், அந்தப் பங்குகள் மியூச்சுவல் பண்டுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும்.