வேளாண் அல்லாத பிற கமாடிட்டி முன்பேர வணிகத்தை ஆராய குழு செபி தலைவர் தகவல்
வேளாண் பொருட்கள் அல்லாத பிற கமாடிட்டிகளின் முன்பேர வணிக பிரிவு குறித்து ஆய்வு செய்ய, குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் தெரிவித்ததாவது: கமாடிட்டி முன்பேர வணிக சந்தையில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பது பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு, நஷ்டத்தை குறைக்க மேற்கொள்ளப்படும் இடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு சந்தைகளை மேலும் உகந்ததாக்கும். எனவே, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்பது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் விவாதித்து வருகிறோம். வேளாண் பொருட்கள் அல்லாத பிற கமாடிட்டிகளின் முன்பேர வணிகப் பிரிவு குறித்து ஆய்வு செய்ய, மிக விரைவில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள் வழங்கும் பரிந்துரைகளைப் பொறுத்து தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். தங்கத்தை பொறுத்தவரை இந்தியாவில் முன்பேர வணிகம், இ.டி.எப்., மற்றும் மின்னணு தங்க ரசீதுகள் என முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட தங்க பொருட்களில் மட்டுமே வர்த்தகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.