| ADDED : டிச 04, 2025 01:17 AM
டிஜிட்டல் கோல்டு நிறுவனங்களுக்கான சுய கட்டுப்பாடு விதிகளை உருவாக்க துவங்கி உள்ளதாக, 'இந்தியா புல்லியன் அண்டு ஜூவல்லர்ஸ் அசோசியேஷன்' தெரிவித்துள்ளது. சுத்த தங்கத்திற்கான தர நிலைகள், பாதுகாப்பு கிடங்குகள், கட்டண வசூல், வரி செலுத்துதல் மற்றும் தணிக்கை போன்றவற்றிற்கான விதிகளை இந்த அமைப்பு வகுக்கும் என்றும்; இந்த விதிகளுக்கு கட்டுப்படும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த அமைப்பில் சேர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான டிஜிட்டல் கோல்டு நிறுவனங்கள் வலுவான இருப்புநிலையை கொண்டவை என்றும்; அவற்றை ஒழுங்குமுறை விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என செபியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.ஜே.ஏ., தலைவர் சுரேந்திர மேத்தா தெரிவித்துள்ளார். செபியின் கட்டுப்பாட்டின் கீழ், தற்போது இத்துறை வராத நிலையில், அதை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.