தங்கத்தை விட ஜொலித்த வெள்ளி
புதுடில்லி:தொழில்துறை தேவை அதிகரித்ததுடன், உலகளாவிய வினியோக பற்றாக்குறை காரணமாக, கடந்த செப்டம்பரில், தங்கத்தை விட வெள்ளி விலை உயர்வை கண்டுள்ளது. தங்கம் விலை 13 சதவீதம் மட்டுமே அதிகரித்த நிலையில், வெள்ளி விலை 19.40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் வெள்ளி விலை தலைநகர் டில்லி சந்தை நிலவரப்படி கிலோவுக்கு 24,500 ரூபாய் உயர்ந்து உள்ளது. கடந்த செப்., 1ல் வெள்ளி விலை ஒரு கிலோ 1,26,000 ரூபாயில் இருந்து, செப்., 30ல் 1,50,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஒரே மாதத்தில் வெள்ளி விலை அதிகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். அதே சமயம், 10 கிராம் தங்கம் விலை 14,330 ரூபாய் மட்டுமே உயர்ந்துள்ளது. செப்., 1ல், 10 கிராம் தங்கம் விலை 1,05,670- ரூபாயில் இருந்து, செப்., 30ல் 1,20,000 ரூபாயாக உயர்ந்தது. இது குறித்து சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது: தொழில்துறை மற்றும் மதிப்புமிக்க உலோகம் என இரண்டு பயன்பாடு காரணமாக, தங்கத்தை விட வெள்ளி விலை, அதிகளவில் விலை உயர்வை கண்டுள்ளது. வெள்ளியின் தேவையில், 60 -70 சதவீதம் தொழில்துறை நுகர்வுக்கு செல்கிறது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. இதனால், தொடர்ச்சியாக, ஏழாவது ஆண்டாக வெள்ளி வினியோகத்தில் பற்றாக்குறை நீடிக்கிறது. உலகளவில், ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை, அதன் வரலாறு காணாத உயர்வான 49.95 அமெரிக்க டாலரை நெருங்கி, சமீபத்தில் 47.75 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,871.81 அமெரிக்க டாலராக உள்ளது. டாலர் மதிப்பு பலவீனம், பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் ஆகியவை வெள்ளியின் மீதான தேவையை அதிகரித்துள்ளன. சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு வங்கியான யு.பி.எஸ்., அடுத்தாண்டு மத்தியில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 55 அமெரிக்க டாலர் வரை உயரும் என கணித்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.