உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஜீரோ பேலன்ஸ் : கடன் கற்றுத்தரும் பாடங்கள்

ஜீரோ பேலன்ஸ் : கடன் கற்றுத்தரும் பாடங்கள்

இன்றைய காலத்தில், கடன் வாங்குவதைத் தவிர்க்கவே முடியாது. நம் குடும்பங்கள் எப்படி கடன் வாங்குகின்றன, எதற்காகவெல்லாம் கடன் வாங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அப்போது தான் நம் நிதி நிலையின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ள முடியும். குடும்ப கடன்களின் அவசியம் இந்தியப் பொருளாதாரத்தில், நம் குடும்பங்கள் வாங்கும் கடன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் ஜி.டி.பி.,யோடு ஒப்பிடும்போது, குடும்பங்களில் சேமிப்பு, 42 சதவீதம் வரை இருக்கிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்த அளவுக்கு குடும்பச் சேமிப்பு இருப்பது ஆரோக்கியமானது தான். ஆனால், சேமிப்பு மட்டுமே, பொருளாதார வளத்தையோ பலத்தையோ பிரதிபலிப்பதில்லை. இந்தியக் குடும்பங்கள் எத்தகைய கடன்களை வாங்குகின்றனர். என்பதும் இதில் முக்கியமானது. ஆக்கப்பூர்வ கடன் உங்கள் நிதி நிலையை உயர்த்தக்கூடிய, சொத்துக்களைச் சேர்க்க உதவுகிற அல்லது உங்கள் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு உதவுகிற கடன்கள் எல்லாமே ஆக்கப்பூர்வ கடன்கள் தான். இத்தகைய கடன்களின் வாயிலாக, உங்கள் மதிப்பு உயரும் அல்லது நீண்டகால பலன்கள் பெருகும். வீட்டுக் கடன்கள் இப்படிப்பட்ட ஒன்றுதான். நம் இந்தியக் குடும்பங்களின் கடனில் 30 சதவீதம், வீட்டுக்காக வாங்கப்படும் கடன் தான். இது ஆக்கப்பூர்வமான கடனாக கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, இதனால், மாதாமாதம் செலுத்த வேண்டிய வாடகை தொல்லை இராது. ஒருவித பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வீடு வழங்கும். நீண்ட கால அளவில், மனை அல்லது வீட்டின் மதிப்பு உயரவே செய்யும். ஆனால், எண்ணற்ற வீட்டுக் கடன்களை வாங்கினீர்கள் என்றால், உங்களிடம் சொத்து வேண்டுமானால் சேரலாம், கையில் பணம் இருக்காது. முதலில் வீட்டுக் கடன் தான் எப்போதும் நினைவில் நிற்கும். அது உங்களுடைய உண்மையான கனவு இல்லமாக இருக்கும். இரண்டாவது, கல்விக் கடன். குழந்தைகளின் கல்விக்காக கடன் வாங்குவது ஆரோக்கியமான வழி. அது அவர்களுடைய எதிர்காலத்துக்குச் செய்யப்படும் முதலீடு மட்டுமல்ல; ஒரு பெற்றோராக அது உங்களுடைய கடமையும் கூட. திருமணச் செலவுகளுக்காக கடன் வாங்குவது ஏற்கத்தக்கதே. பயங்கர ஆடம்பரமாக திருமணம் செய்வதில் அர்த்தமில்லை. செலவுகளை சிக்கனப்படுத்தி, அதற்கு மட்டும் தேவைப்படும் தொகையை கடனாக வாங்கலாம். ஆக்கப்பூர்வமான கடன் என்பது, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளர்ப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். வளரக்கூடிய சொத்து ஒன்றை உருவாக்கவோ, வாங்கவோ பயன்பட வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைப்பதாக இருக்க வேண்டும். ஓர் அபாய எச்சரிக்கை மட்டும் சொல்லிவிடுகிறேன். கடன் வாங்கி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது மிகவும் அபாயமானது. உங்களுடைய சேமிப்புகளில் இருந்து தான் பங்குச் சந்தை முதலீடு வர வேண்டுமே தவிர, கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில், பங்குச் சந்தையில் பயங்கர ஏற்ற இறக்கம் இருக்கும். அதில் போட்ட பணம், மோசம் போகும் வாய்ப்பு அதிகம். அழிக்கும் கடன் மதிப்பு உயராத பொருளுக்காக வாங்கும் கடன், உங்கள் நிதி நிலையை உயர்த்த உதவாத கடன், தற்காலிக சந்தோஷங்களை மட்டுமே தரக்கூடியவற்றுக்காக வாங்கப்படும் கடன் ஆகிய அனைத்தையும் அழிக்கும் கடன் என்று வகைப்படுத்தலாம். உங்களை அழிக்கும் கடன்கள் எவை தெரியுமா? விலை உயர்ந்த பொருட்களை மாதாந்திர தவணையில் வாங்குவது, சுற்றுலா செல்ல கடன் வாங்குவது, கிரெடிட் கார்டில் திருப்பிச் செலுத்தாத தொகையை அப்படியே வைத்திருப்பது, அதன் வாயிலாக கூடுதல் வட்டி கட்டிக் கொண்டிருப்பது ஆகிய அனைத்துமே அழிக்கும் கடன் தான். இத்தகைய கடன்கள் காலவோட்டத்தில் உங்களுடைய நிகர மதிப்பை மட்டும் குறைப்பதில்லை. உங்களுடைய சேமிக்கும் திறனை கபளீகரம் செய்துவிடும். அழிக்கும் கடன் ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சொல்லி மாளாது. அது உங்களை நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிடும். தற்காலிக மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கும். அந்தக் கடனுக்கு நீங்கள் செலுத்தும் வட்டி மிக அதிகமாக இருக்கும். உங்களுடைய நீண்டகால நிதி வலிமையையும் அது குலைத்துவிடும். அப்படியானால், கடன் பக்கமே போகக் கூடாதா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. எல்லா கடனும் மோசமானவை அல்ல. எதற்காக கடன் வாங்குகிறீர்கள் என்பதில் தான் சூட்சுமமே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான கடன், உங்களுக்கு நம்பிக்கை தரும், பாதுகாப்பு தரும், நீண்ட கால பலன் தரும். அழிக்கும் கடனோ, அப்போதைக்கு தற்காலிக சந்தோஷத்தைத் தரலாம். ஆனால், நீண்ட கால அளவில் நெருக்கடியை மட்டுமே ஏற்படுத்தும். நல்லதையும் அல்லதையும் சரியாக பிரித்துப் புரிந்துகொள்ளும் போது, நம் குடும்பங்கள் இன்னும் பொறுப்புடன் கடன் வாங்கும். அதன் வாயிலாக, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும். சி.கே.சிவராம் நிறுவனர், ஐகுளோபல் ஆல்டர்நேட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ