தமிழக தீப்பெட்டி வர்த்தகத்தை பாதிக்கும் கன்டெய்னர் தட்டுப்பாடு, சீன லைட்டர்கள்
துாத்துக்குடி:கன்டெய்னர்கள் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக, தமிழகத்தில் தீப்பெட்டி ஏற்றுமதி தடைபட்டதால், பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. தீப்பெட்டி தயாரிப்பு பணிகளில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால், தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, கன்டெய்னர் விலை ஏற்றம் காரணமாக, தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய முடியாமல், பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள், துாத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கன்டெய்னர்கள் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தீப்பெட்டி ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, தற்போது முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது.அத்துடன் பிளாஸ்டிக் லைட்டர் பிரச்னை காரணமாக, தற்போது வாரத்துக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது. மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வரை துறைமுகங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இனி வேலைநாட்களை மேலும் குறைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். கன்டெய்னருக்கு அதிக விலை கொடுத்து தீப்பெட்டியை விற்பனைக்கு அனுப்பினால், மற்ற நாடுகளை விட இந்தியாவின் தீப்பெட்டி விலை அதிகம் என்பதால், விற்பனை பாதிக்கப்படும் நிலை உள்ளது.துறைமுகம் வழியாக கொண்டு செல்லப்படும் தீப்பெட்டிகளுக்கு, பாகிஸ்தான் அரசு மானியம் வழங்கி வருகிறது. அதேபோன்று இந்திய அரசும் வழங்க வேண்டும்.கடந்த காலங்களில் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்களை கொண்டு செல்வதற்கு, இரண்டு லட்சம் ரூபாய் வாடகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது, ஆறு முதல் எட்டு லட்சம் ரூபாயாக வாடகை உயர்ந்து விட்டது. சில நாடுகளில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக கப்பல்கள் சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.