ஸ்கூட்சியில் ஸ்விக்கி ரூ.1,000 கோடி முதலீடு
புதுடில்லி:உணவு வினியோக பிரிவில் ஈடுபட்டு வரும் ஸ்விக்கி நிறுவனம், தொழில் விரிவாக்கத்திற்காக, அதன் துணை நிறுவனமான 'ஸ்கூட்சி'யில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பரில் இந்நிறுவனத்தில் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், மீண்டும் முதலீடு செய்ய உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ஸ்விக்கியால் கையகப்படுத்தப்பட்ட ஸ்கூட்சி நிறுவனம், உணவு, பொம்மைகள், அழகு சாதனப் பொருட்கள், மின்னணுவியல் மற்றும் பலவகை பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின், மற்றொரு பிரிவான 'இன்ஸ்டாமார்ட்' அதன் விரைவான விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, இதற்காக தேவைப்படும் மூலதன தொகையை, பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்ட முடிவு செய்துள்ளதாக, பங்குச் சந்தை தாக்கலில் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதற்காக, ஸ்கூட்சியின் பங்கு ஒன்றின் விலையாக 7,640 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.