சீனாவின் புதிய ஏ.ஐ., மாடல்கள் அடுத்து களமிறங்கிய அலிபாபா
பெய்ஜிங்:டீப்சீக் ஏ.ஐ., மாடலை தொடர்ந்து, சீனாவின் முன்னணி நிறுவனமான அலிபாபா, 'நியூ குயின் 2.5 மேக்ஸ்' என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகம் செய்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யில் முன்னிலை வகிக்க பல நாடுகள் கடும் போட்டியில் இறங்கி வருகின்றன. ஸ்டார்கேட் என்ற ஏ.ஐ., மேம்பாட்டு கூட்டணி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், அடுத்த சில நாட்களில் டீப்சீக் என்ற இரண்டு ஏ.ஐ., மாடல்களை குறைந்த செலவிலான சேவையாக சீனா அறிமுகம் செய்தது.டீப்சீக் ஏ.ஐ., மாடல்களின் போட்டியால், அமெரிக்காவின் ஓப்பன் ஏ.ஐ., என்விடியா ஆகிய நிறுவனங்கள் சந்தையில் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், சீனாவில் இருந்து மற்றொரு ஏ.ஐ., மாடல் அறிமுகமாகியுள்ளது.குயின் 2.5 மேக்ஸ் என்ற ஏ.ஐ., மாடல் மிகச்சிறந்த செயல்பாடு கொண்டது என்றும்; ஓபன் ஏ.ஐ.,யின் சாட் ஜிபிடி, டீப்சீக் ஆகியவற்றின் ஏ.ஐ., சேவையை விட அதிவேகமாகவும் துல்லியமாகவும் செயல்படக்கூடியது என்றும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தன் ஏ.ஐ., மாடலுக்கான கட்டணம் மிகக் குறைவு என அலிபாபா தெரிவித்துள்ளதால், சீனாவில் ஏ.ஐ., மாடல் சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பைடு, டென்சென்ட் ஆகிய நிறுவனங்களும் இந்தப் போட்டியில் களம் கண்டு, தங்கள் புதிய ஏ.ஐ., மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.
ஏ.ஐ., மாடலின் பயன்கள்
இப்போது வங்கி உள்ளிட்ட மொபைல் செயலிகள், கணினிகளின் திரை ஓரத்தில், நான் உங்களுக்கு உதவலாமா என ரோபோ அல்லது பொம்மை வடிவில் ஒளிர்ந்து கொண்டிருப்பது, ஏ.ஐ., மாடல் தான். சம்பந்தப்பட்ட சேவையில் வாடிக்கையாளரின் சந்தேகங்களை ஒலி வடிவிலோ, எழுத்து வடிவிலோ உடனுக்குடன் இது தீர்த்து வைக்கிறது. தரவுகள் சேமிப்பு அடிப்படையில், கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவில் ஆளில்லாமலேயே தானியங்கி பதிலை இந்த ஏ.ஐ., தொழில்நுட்பம் சாத்தியமாக்கியுள்ளது. தகவல் சேமிப்பு அடிப்படையில் முடிவெடுத்து, அதை செயல்படுத்துகிறது இந்த ஏ.ஐ., மாடல்.