உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கலைஞர் கடனுதவி திட்டம் துவக்கம்: 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன்

கலைஞர் கடனுதவி திட்டம் துவக்கம்: 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை கடன்

சென்னை: குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் கலைஞர் கடனுதவி திட்டத்தை, தமிழக அரசின், 'தாய்கோ' வங்கி துவக்கியுள்ளது.தமிழகத்தில், பல லட்சம் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. குறைந்த முதலீட்டில் துவங்கப்படும் இந்நிறுவனங்களால், மூலப்பொருட்கள் கொள்முதல் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்நிறுவனங்களுக்கு தற்போது உதவும் வகையில், தாய்கோ வங்கி வாயிலாக 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் கலைஞர் கடனுதவி திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தாய்கோ வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:குறுந்தொழில்களுக்கு எளிதில் கடன் கிடைக்க, ஒரு நிறுவனத்துக்கு 7 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் கலைஞர் கடனுதவி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சட்டசபையில் அறிவித்தார்.இதற்காக நடப்பு நிதியாண்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், தாய்கோ வங்கி வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.தற்போது, தாய்கோ வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த சிறப்பு கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, கடன் தேவைப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள், வங்கி கிளை மேலாளர்களை அணுகலாம்.சிறப்பு கடன் திட்டம் அனைத்து தொழில்முனைவோரையும் சென்றடைய, 'டான்ஸ்டியா' உட்பட பல்வேறு குறுந்தொழில் சங்கங்களுடன் கூட்டம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.தமிழக சிறு, குறு, நடுத்தர, தொழில் துறையின்கீழ் 250க்கும் மேற்பட்ட தொழிற்கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அவற்றுக்கு கடன் வழங்கும் பணியை மேற்கொண்டுவரும் தாய்கோ வங்கி, தனிநபர், சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தற்போது கடன் வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை