தவிடு ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும்
புதுடில்லி:எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு ஏற்றுமதிக்கான தடையை நீக்குமாறு, மத்திய அரசுக்கு, சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பு கோரிக்கை விடுத்துஉள்ளது. இந்தியாவில் இருந்து எண்ணெய் நீக்கப்பட்ட தவிட்டை ஏற்றுமதி செய்வதற்கு, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்துஉள்ளது. இந்த சூழலில், சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் அமைப்பான எஸ்.இ.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: தவிடு ஏற்றுமதிக்கு தடையை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் இந்த தடையை நீட்டிக்க வேண்டாம் என்று அவர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். கடந்த 2023-ல் இந்த தடை அமலாவதற்கு முன், இந்தியா ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாய் மதிப்பில், எண்ணெய் நீக்கிய தவிட்டை 5 முதல் 6 லட்சம் டன் ஏற்றுமதி செய்து வந்தது. தடையால், புரதச்சத்து மிகுந்த தீவனங்களின் விலை 50 சதவீதம் குறைந்தபோதிலும், பாலின் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், எண்ணெய் நீக்கப்பட்ட தவிட்டின் விலை டன்னுக்கு 10,000 ரூபாய் முதல் 11,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களையும், இந்தியாவின் ஏற்றுமதியையும் பாதிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.