பத்திரங்கள் முதலீடு: இரண்டாம் நிலை சந்தையில் வாங்குவது ஏற்றதா?
பல்வேறு வகை பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு அண்மை காலமாக சராசரி முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்து வருகிறது. பத்திரங்கள் முதலீட்டை சில்லரை முதலீட்டாளர்கள் அணுகும் வகையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள், இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இந்நிலையில், இரண்டாம் நிலை சந்தையில் பத்திரங்களை வாங்கி முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது. இரண்டாம் நிலை சந்தையில் பத்திர முதலீடு செய்வது தொடர்பாக தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்களை பார்க்கலாம்.சந்தை வாய்ப்பு:
பத்திரங்கள் வெளியிடப்படும் போது அவற்றில் முதலீடு செய்யலாம். முதிர்வு காலத்திற்கு முன், அவற்றை இரண்டாம் நிலை சந்தையிலும் வாங்கி விற்கலாம். இடைப்பட்ட காலத்தில் வெளியேற விரும்பும் முதலீட்டாளருக்கு விற்பது ஒரு வாய்ப்பாக அமைவது போலவே, வாங்குவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது.குறைந்தபட்ச தொகை:
சில்லரை முதலீட்டாளர்கள், 1,000 முதல் 10,000 ரூபாய் வரை முகமதிப்பு கொண்ட பத்திரங்களை டிமெட் கணக்கு மூலம் வாங்கலாம். இந்த பரிவர்த்தனை வாங்குவோர், விற்போர் இடையே நிகழ்கிறது. பத்திரங்களின் வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ப பலன் பெறலாம்.பலவகை பத்திரங்கள்:
பொது திட்டங்களுக்கு நிதி திரட்ட அரசு சார்பில் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் சார்பிலும் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவைத்தவிர, வரி இல்லா பத்திரங்கள், தங்க சேமிப்புபத்திரங்கள், வர்த்தக பத்திரங்கள், பசுமை பத்திரங்கள் உள்ளிட்டவையும் இருக்கின்றன.முதலீடு பலன்:
தற்போதைய சந்தை நிலை, பத்திர முதலீட்டிற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. அரசு பத்திரம், 10 ஆண்டில்6.8 சதவீத பலன் அளிக்கும் நிலை உள்ளது. வர்த்தக பத்திரங்கள் கூடுதல் பலன் அளிக்கலாம். ஆனால், வட்டி விகித போக்கு மற்றும் பத்திர பலன் இடையிலான தொடர்பை அறிந்து கொள்வது அவசியம்.இடர் அம்சங்கள்:
பொதுவாக வட்டி விகிதம் குறையும் சூழலில், பத்திரங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த போக்கு பலன் அளிக்கும் என்றாலும், இரண்டாம் நிலை சந்தையில் வாங்கும் போது, வட்டி விகித இடர் உள்ளிட்ட பல்வேறு இடர்கள் உள்ளன. விரிவாக்கத்திற்கு உதவும் என்றாலும், நிதி சூழல், பணமாக்கல் உள்ளிட்ட அம்சங்கள் முக்கியம்.