தேங்காய் எண்ணெய் இறக்குமதியை அனுமதிக்க வேண்டும்
புதுடில்லி,:தேங்காய் எண்ணெய் விலை விண்ணை முட்டுமளவு அதிகரித்து வருவதையடுத்து, விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர, இறக்குமதியை அனுமதிக்குமாறு, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.தேங்காய் எண்ணெய் விலை, மொத்த விலை சந்தையில் கிலோ ஒன்றுக்கு 400 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்தில் 130 ரூபாயாக இருந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் மலிவு விலையில் கிடைக்கும் பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் பக்கம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், எஸ்.இ.ஏ., எனும் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாங்க வைப்பது மிகவும் கடினம்
கடந்த ஓராண்டில், தேங்காய் எண்ணெய் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த இடைக்கால ஏற்பாடாக, தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரையின் குறுகிய கால இறக்குமதிக்கு, மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். ஏனென்றால், மக்கள் குறிப்பிட்ட எண்ணெய் பயன்பாட்டை விட்டு வேறு வகைக்கு பழகிவிட்டால், அவர்களை மீண்டும் முந்தைய வகை எண்ணெய்யை வாங்க வைப்பது மிகவும் கடினம். கடலை எண்ணெய் விஷயத்திலிருந்து இது தெளிவாகிறது.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
என்ன காரணம்?
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தேங்காய் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது. கடந்தாண்டு மார்ச் முதல் மே மாதம் வரை நிலவிய கடும் வெப்பமும், அவ்வப்போது நிகழும் பூச்சி தாக்குதலும் தென்னை மரங்களின் ஆரோக்கியத்தை பாதித்துள்ளன. இதனால் உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது.