உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டம்  ஜப்பான் ரூ.2,070 கோடி நிதி உதவி

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டம்  ஜப்பான் ரூ.2,070 கோடி நிதி உதவி

சென்னை:தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலான நிறுவனங்கள் தொழில் துவங்க, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின், 2,070 கோடி ரூபாய் கடன் உதவியுடன் ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தை, 2,965 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்த, தொழில் துறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 2,070 கோடி ரூபாயை, ஜே.ஐ.சி.ஏ., ஏனப்படும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் கடனாக வழங்குகிறது. இதற்கு ஆண்டு வட்டி, 2.45 சதவீதம். இந்த கடனை, 30 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். மீதி தொகையை, தமிழக அரசு வழங்குகிறது.முதலீட்டு ஊக்குவிப்பு திட்டம் நான்கு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, தமிழக தொழில் சூழல் நிதியத்திற்கு நிதி வழங்கி, ஏற்கனவே உள்ள தொழில் பூங்காக்களில் சாலை அமைத்தல், தண்ணீர் வசதி உள்ளிட்ட சிறிய அளவிலான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.மாநிலம் முழுதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அனைத்து விபரங்களும் அடங்கிய புள்ளி விபரம் தயாரிக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் வாயிலாக, வளர்ந்து வரும் துறைகளுக்கான சூழல் நிதியத்தின் கீழ், 'செமிகண்டக்டர்' உள்ளிட்ட துறைகளை சேர்ந்த, வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத, பெரிய நிறுவனங்கள் தொழில் துவங்க, 'சிப்காட்' வாயிலாக, இரண்டு தொழில் பூங்காக்களும், சிறு நிறுவனங்களுக்கு, 'சிட்கோ' வாயிலாக இரு தொழிற்பேட்டைகளும் உருவாக்கப்பட உள்ளன. இதற்கு, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக பசுமை காலநிலை நிதியம் வாயிலாக, பசுமை தொழில்நுட்ப துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்யப்படும். பிளாஸ்டிக் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை என, ஏதேனும் ஒரு பசுமை திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மீதி நிதி, பாலிடெக்னிக், அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது போன்றவற்றுக்கு செலவிடப்பட உள்ளது.  முதலீட்டு ஊக்குவிப்பு திட்டம், 2027 மார்ச்சுக்குள் முடிக்கப்பட வேண்டும் பல்துறை அதிகாரிகள் கொண்ட திட்ட மேலாண்மை குழு கண்காணிக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை