| ADDED : ஆக 12, 2025 07:01 AM
புதுடில்லி: நம்நாட்டை, உலகின் முக்கிய உற்பத்தி மையமாக உருவாக்க, நிலச் சீர்திருத்தங்கள் அவசியம் என, இந்திய தொழில் கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது. மேலும் அது தெரிவித்ததாவது: நம்நாட்டின் நிலையான கொள்கை கட்டமைப்பு, சுறுசுறுப்பான தொழில் துறை திறமைகள், குறிப்பிடத்தக்க உள்நாட்டு சந்தை, இளைய தலைமுறை தொழிலாளர்கள், நம்பகமான கூட்டாளியாக கருதும் நாடுகள் ஆகியவை, முதலீட்டுக்கான நாடாக உலகை கருதச் செய்கின்றன. வர்த்தகப் போர் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகிய சவால்களை மீறி, நம்நாட்டின் தொழிற் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதைப் பயன்படுத்தி, உற்பத்தி மையமாக நம்நாட்டை மாற்ற, வலிமையான நிலச் சீர்திருத்தம் அவசியம். கிராமப்புற மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் வாய்ப்புகளை திறக்கவும் இந்த நிலச்சீர்திருத்தம் தேவை. இதற்கு ஜி.எஸ்.டி., போல தனி கவுன்சில் ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மற்றும் ஒருமித்த கருத்து அடிப்படையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். குறிப்பாக, நாடு முழுவதும் 3 முதல் 5 சதவீதமாக ஒரே முத்திரைத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.