தயாரிப்பு துறை வளர்ச்சி செப்., காலாண்டில் உயரும்
புதுடில்லி:'உள்நாட்டு தேவை அதிகரிப்பு, ஜி.எஸ்.டி., குறைப்பு ஆகியவை காரணமாக நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் அதிகரிக்கும்' என இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின், சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் முக்கிய எட்டு துறைகளைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்களிடம், கடந்த ஜூன் காலாண்டில் நடத்தப்பட்ட சர்வேயில், வளர்ச்சி காணும் என 77 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். ஆனால், செப்டம்பர் காலாண்டில், வாகனம், மூலதன பொருட்கள், ரசாயனங்கள், உரங்கள், மருந்துகள், மின்னணு பொருட்கள், உலோகங்கள், ஜவுளி ஆகிய எட்டு முக்கிய துறைகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்களில் 87 சதவீதம் பேர், வளர்ச்சி அல்லது முந்தைய தயாரிப்பு அளவு இருக்கும் என தெரிவித்துள்ளனர். கடந்த பல காலாண்டுகளோடு ஒப்பிடுகையில், வளர்ச்சி காணும் என அதிகமானோர் தற்போது தெரிவித்துள்ளனர். எனினும், புவிசார் நிச்சயமற்ற சூழல், மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் கெடுபிடி ஆகியவை விரிவாக்க திட்டங்களுக்கு சவால்களாக இருப்பதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி இருப்பதால், 57 சதவீத நிறுவனங்கள், வரும் காலாண்டுகளில் கூடுதல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டு உள்ளன. 20 சதவீத நிறுவனங்கள், திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.