செமிகண்டக்டர் தொழில் துவங்க கோவை வாரப்பட்டியில் மனைகள்
சென்னை:செமிகண்டக்டர் தயாரிப்பு, வடிவமைப்பு போன்றவற்றை உள்ளடக்கிய தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்காக, கோவை மாவட்டம், வாரப்பட்டியில் மனைகளை ஒதுக்க, 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாரப்பட்டியில், 372 ஏக்கரில் வான்வெளி மற்றும் ராணுவத்துக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தொழில் துவங்க பாதுகாப்பு உபகரண உற்பத்தி பூங்கா அமைக்கப்படுகிறது. இதை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமும், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனமும் இணைந்து அமைக்கின்றன. தமிழகத்தில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனங்கள் தொழில் துவங்க, கோவை மாவட்டம், சூலுாரிலும், திருப்பூர் பல்லடத்திலும் தலா, 100 ஏக்கரில் செமிகண்டக்டர் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. பல்லடம் அருகில் கேத்தனுாரில், 99 ஏக்கர் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கிடையே, வாரப்பட்டி தொழில் பூங்கா தயார் நிலையில் உள்ளது. எனவே, அங்குள்ள தொழில் மனைகளை, செமிகண்டக்டர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய, 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது.