புதுப்பிக்கத்தக்க மின் உபகரண இறக்குமதிக்கு பதிவு கட்டாயம்
புதுடில்லி:குறிப்பிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உபகரணங்கள் இறக்குமதிக்கு, பதிவு செய்வது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நவ.1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: சோலார் மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கடினமான பாதுகாப்பு கண்ணாடி, போட்டோ வோல்டிக் செல்கள் மற்றும் ஒளி உணர்திறன் செமிகண்டக்டர் சாதனங்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு பதிவு செய்வது கட்டாயம். காற்றாலை மின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் டவர், பேரிங் ஹவுசிங், கியர்ஸ், கியரிங் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதிக்கும் இதே நிபந்தனை பொருந்தும். சாலை, விமானம் மற்றும் கடல் வழியாக இறக்குமதி செய்யப்படுவதற்கு இது பொருந்தும். எனினும், ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற இறக்குமதியாளர்கள், ஏற்றுமதி சார்ந்த மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் ஆலைகள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.