உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பொருளாதார மந்தநிலை அச்சம் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி

பொருளாதார மந்தநிலை அச்சம் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை:அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம், இந்திய பங்குச் சந்தைகளை நேற்று ஆட்டம் காண செய்தது. நேற்றைய வர்த்தகத்தின் போது, சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் 1,000 புள்ளிகளும், நிப்டி 350 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டதால், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்தனர்.அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம், ஜப்பான், தென்கொரிய உள்ளிட்ட உலகளவில் பல சந்தைகளை பாதித்தது. அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 215 லட்சம் கோடி ரூபாயை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இந்திய சந்தையில் ஐ.டி., மருந்து தயாரிப்பு மற்றும் உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை கண்டன.அதிகபட்சமாக, டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, சிப்லா, ஓ.என்.ஜி.சி., டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. நிப்டி ஐ.டி., குறியீட்டில் இடம்பெற்றுள்ள கோபோர்ஜ், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் அதிக இழப்பை சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை சரிவால் நிறுவனங்களில் லாபம் குறைவது, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் தொடர்வது போன்றவை முதலீட்டாளர்களின் கவலையை அதிகரிக்க செய்தது.இதனுடன், விரைவில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் மருந்துகளுக்கும், தனியாக வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, அரபிந்தோ பார்மா, லாரஸ் லேப்ஸ் மற்றும் லுாபின் உள்ளிட்ட இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் 8 சதவீதம் வரை இறக்கம் கண்டன. வர்த்தக முடிவில், சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் 930 புள்ளிகள், நிப்டி 345 புள்ளிகள் என சரிவுடன் நிறைவு செய்தன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 3,484 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 3.26 சதவீதம் குறைந்து, 67.85 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்து, 85.44 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை