உள்ளூர் செய்திகள்

வர்த்தக துளிகள்

சி.சி.ஐ., குழுமம் மேலும் ரூ.640 கோடி முதலீடு

சரக்கு வினியோக தொடர் சேவைகளை வழங்கி வரும் சி.சி.ஐ., குழுமம், போளிவாக்கத்தில் வினியோக தொடர் பூங்கா அமைப்பதற்காக, கூடுதலாக 640 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், உலக தரத்திலான வினியோக கட்டமைப்பை உருவாக்க, முதல்கட்டமாக 250 கோடி ரூபாயை ஏற்கனவே இந்நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், தற்போதைய முதலீட்டையும் சேர்த்து,போளிவாக்கம் பூங்காவுக்கு 890 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இது குறித்து சி.சி.ஐ., குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “தென் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மையமாக உருவெடுத்து வரும் சென்னையில் அமையும் இந்த நவீன பூங்கா, தொழிற்சாலைகள், இகாமர்ஸ், ஆட்டோமொபைல், நுகர்பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவைகளை வழங்கும்” என தெரிவித்துள்ளது.

வேதாந்தா வணிகத்தை பிரிக்க பங்குதாரர்கள் ஒப்புதல்

வேதாந்தா நிறுவனத்தின் வணிகத்தை ஐந்து வெவ்வேறு நிறுவனங்களாக பிரிக்க, அதன் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பங்குச் சந்தையில் அறிக்கை தாக்கல் செய்துள்ள வேதாந்தா நிறுவனம், ஓட்டளித்த பங்குதாரர்களில் 99.99 சதவீதமும்; கடன் வழங்குவோரில் 99.95 சதவீதமும் வணிகத்தை பிரிப்பதற்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால், கடந்த 2023ல் இதற்கான பணிகளை துவங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்படி உலோகம், அலுமினியம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், உருக்கு என நிறுவனத்தின் வணிகம் ஐந்தாக பிரிக்கப்பட உள்ளது.

இந்தியாவுக்கு வந்த அமெரிக்க சுகாதார பொருட்கள் நிறுவனம்

சமையலறை மற்றும் கழிப்பறை பொருட்கள் தயாரிப்பாளரான அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல 'மோயன்' நிறுவனம், 'பாத்லைன் அக்வாவிவா' குழுமத்துடன் கூட்டு வைத்து, இந்திய சுகாதார பொருட்கள் சந்தையில் நுழைந்துள்ளது. பிரீமியம் சுகாதார பொருட்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கண்டுபிடிப்புகள் விஷயத்தில் மோயன் நிறுவனமும், இந்திய சந்தை குறித்த புரிதலில் அக்வாவிவாவும் இணைந்து, செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுகாதார பொருட்கள் சந்தையின் மதிப்பு தற்போது கிட்டத்தட்ட 56,000 கோடி ரூபாயாக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு 7.74 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

119 வெளிநாட்டு செயலிகள்

மத்திய அரசு முடக்கம்மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 119 செயலிகளை முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பெரும்பாலானவை சீனா, ஹாங்காங்கைச் சேர்ந்தவை. வீடியோ மற்றும் வாய்ஸ் சாட் செயலிகளே அதிகளவு முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, நேற்று மாலை வரை இதில், 15 செயலிகள் மட்டுமே கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருந்தன; மற்ற செயலிகளைக் காண முடிந்தது. கூகுள் வாயிலாகவே தங்களது செயலிகள் நீக்கப்பட்டது தெரிய வந்ததாகவும், பிரச்னை ஏதேனும் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவன செயலிகளும் முடக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ