உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அரிசிக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்திய இந்தியா மீது அமெரிக்கா புகார்

அரிசிக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்திய இந்தியா மீது அமெரிக்கா புகார்

வாஷிங்டன்:நெல் சாகுபடி சாதனை அளவை எட்டிய நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கும் இந்தியாவின் முடிவு குறித்து உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. உலக வர்த்தக அமைப்பில், அமெரிக்கா, பராகுவே நாடுகள் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விளக்கம் வேண்டும் தானியங்களுக்கான மானிய அளவை மீறுவது குறித்த உலக வர்த்தக அமைப்பின் பாலி இடைக்கால முடிவின் கீழ், சலுகையை இந்தியா பெற்று வருகிறது. இந்நிலையில், அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இந்தாண்டு அதிகரித்திருப்பது குறித்து இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும். இந்தியாவில் நடப்பாண்டு நெல் சாகுபடி சாதனை அளவை எட்டியுள்ளதுடன், ஏற்றுமதி, கையிருப்பு ஆகியவையும் உள்நாட்டு உணவு மானியத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு பொது வினியோக திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை ஒரு பகுதியாக இருந்தாலும், எத்தனால் உற்பத்தி, ஏற்றுமதி, கையிருப்பை விடுவித்தல் உள்ளிட்ட உணவு அல்லாத பயன்பாடுகளையும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டம் உள்ளடக்குவது உணவு பாதுகாப்பை தாண்டிய விஷயமாகும். எனவே, உலக வர்த்தக அமைப்பு சார்பில், இந்தியாவிடம் விளக்கம் பெறப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. பயன்பெறுகின்றனர் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால், சிறிய, நடுத்தர விவசாயிகள் பயன்பெறுவதுடன், ஏழைகளுக்கு உணவளிக்க முடிகிறது என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் அரிசி விலை உயராமல் உறுதிப்படுத்தி, மிகக்குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகளின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பராகுவே நாடுகளின் இந்த மனு குறித்து, வரும் 25, 26ம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக வர்த்தக அமைப்பின் ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.  உணவு அல்லாத பயன்பாடுகளையும் குறைந்தபட்ச ஆதார விலை திட்டம் உள்ளடக்குவதாக அமெரிக்கா புகார்  இந்தியா மீது அமெரிக்கா, பராகுவே அளித்துள்ள மனு மீது செப்., 25, 26ல் உலக வர்த்தக அமைப்பு விவாதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !