உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள்: சுயதொழில் செய்பவருக்கு சேமிப்பு திட்டங்கள் அவசியமா?

ஆயிரம் சந்தேகங்கள்: சுயதொழில் செய்பவருக்கு சேமிப்பு திட்டங்கள் அவசியமா?

எனக்கு தற்போது வயது 52. மனைவி மற்றும் ஒரு மகன். எங்கள் குடும்பத்திற்கு நிரந்தர வருமானம் என்று எதுவும் இல்லை. பழைய சேமிப்புகளை வைத்து சமாளிக்கிறேன். சொந்த வீடு இல்லை. மாத செலவு 40,000 ரூபாய் வரை ஆகிறது. மகன் பிளஸ் 1 வகுப்பு படிக்கிறான். என் குடும்ப சூழ்நிலையை உங்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டேன். நானும், என் மனைவியும் 15 ஆண்டுகள் கழித்து வாழக்கூடிய சூழ்நிலையில் மாதச் செலவு எவ்வளவு ஆகும்? எஸ்.எம்.விஸ்வநாதன், மதுரை இதை கணக்கிட, ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் எவ்வளவு உயரும் என்பதை மதிப்பிட வேண்டும். தோராயமாக ஆண்டுதோறும் 5 சதவீதம் அளவுக்கு பணவீக்கம் இருக்கிறது என்று கருதினால், பின்வரும் சூத்திரத்தை பயன்படுத்துங்கள்: எதிர்கால மதிப்பு = தற் போதைய மதிப்பு x (1+ பணவீக்கம்) ஆண்டுகள். அதாவது = 40,000 x (1+ 0.05)15 = 83,160. இன்றைய 40,000 ரூபாயின் மதிப்பு, 15 ஆண்டுகளில் 83,160 ரூபாயாக உயரும். என் வயது 27. சுயதொழில் செய்கிறேன். என் எதிர்கால சேமிப்புக்கு என்னென்ன திட்டங்கள் மற்றும் முதலீடுகள் செய்யலாம்? பிற்காலத்தில் நான் வருமானம் பெற வழி என்ன? பாலா, திருப்பத்துார் உங்களுக்கு தனியே முதலீடு என்று ஒன்று வேண்டுமா என்ன? உங்கள் தொழில் தான் உங்கள் முதலீடு, லாபம், எதிர்காலம் எல்லாம். சுயதொழில் செய்யாதவர்களும், செய்யத் தெரியாதவர்களும் தான் விதவிதமான முதலீட்டு இனங்களில் பணம் போட்டுவிட்டு, வருவாய்க்காக பேயாய் அலைகின்றனர். உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. உங்கள் தொழிலில் உபரியாக லாபம் கிடைத்தால், அதையும் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கே செலவு செய்யுங்கள். மற்றவர்கள் மாதிரி நீங்கள் பங்கு, ரியல் எஸ்டேட் என்று சீரழியாதீர்கள். கூடுதல் வருவாய் பெறுவதற்கு வெள்ளி, தங்கம் அல்லது டிஜிட்டல் தங்கம், எதில் முதலீடு செய்யலாம்? எஸ்.அருணா, மதுரைதங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பஸ்களும் பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பி ரொம்ப காலம் ஆச்சு. இனிமே ஓடிப்போய் அதை பிடிக்க முடியும் என்று கனவு காண வேண்டாம். போன பஸ், திரும்பி வந்து தான் ஆக வேண்டும். அது வரை காத்திருப்பது ஒன்று தான் இப்போதைக்கு புத்திசாலித்தனம். 'கூடுதல் வருவாய்' என்ற சொல்லை தாங்கள் பயன்படுத்தியதற்காக இந்த உதாரணத்தைச் சொன்னேன். இல்லை, தங்கத்தை நீண்டகால முதலீடாக கருதுகிறேன். உடனே விற்று லாபம் பார்க்கும் எண்ணமில்லை என்றால், தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்யுங்கள். உயர்ந்தாலும், சரிந்தாலும், அடுத்த 10 - 15 ஆண்டுகளுக்கு எடுக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டி, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இ.டி.எப்.,பில் போட்டு வாருங்கள். ஏற்ற இறக்கத்தை தாண்டி, நல்ல வருவாயை தங்கம் தரும். டிபெஞ்சர்ஸ் என்றால் என்ன? ஒரு சில டிபெஞ்சர்ஸ் ஆண்டுக்கு 10.40 சதவீதம் வருவாய் தருவதாக விளம்பரம் பார்த்தேன். அப்படியென்றால், அவற்றில் முதலீடு செய்யலாமா; பாதுகாப்பானதா? எஸ்.சிவகுமார், மின்னஞ்சல் டிபெஞ்சர்ஸ் என்பவை ஒரு வகை கடன் பத்திரங்கள். மத்திய - மாநில அரசுகளும், தனியார் பெருநிறுவனங் களும் தங்களுடைய முதலீடுகளுக்காகவும், செலவுகளுக்காகவும் பொதுமக்கள், மியூச்சுவல் பண்டுகள், பெருமுதலீட்டாளர்களிடம் இருந்து பணம் திரட்டும். அதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு இவ்வளவு வட்டி தருவோம் என்று விளம்பரம் செய்து டிபெஞ்சர்ஸ் வெளியிடுவர். அரசு துறை சார்ந்த கடன் பத்திரங்கள் என்றால் பிரச்னை இல்லை. அங்கே பக்கபலமாக இருந்து உறுதி தருவது அரசு. ஆனால், கூடுதல் வட்டி கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், தனியார் பெருநிறுவன கடன் பத்திரங்கள் தான் கூடுதல் வட்டியோடு வெளிவரும். இவை பெரும்பாலும் அன்செக்யூர்டு, அதாவது பாதுகாப்பில்லாதவை என்று வகை செய்யப்படும். இங்கே இத்தகைய டிபெஞ்சர்ஸ் வெளியிடும் நிறுவனத்தின் நற்பெயர், செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் செயல்பாடுகளை கணிப்பதற்கு, பல்வேறு ரேட்டிங் நிறுவனங்களின் குறியீடுகள் திசைகாட்டியாக செயல்படும். அந்த குறியீடுகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, முற்காலத்தில் அந்நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான பணம் முறையாக திருப்பித் தரப்பட்டனவா என்றெல்லாம் பார்த்து விட்டு முதலீடு செய்யலாம். பங்கு சந்தை மாதிரி கடன் பத்திர சந்தையும் சுவாரசியமானது. கொஞ்சம் விபரமாக படித்து பின்னர் உங்களுக்கு பிடித்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அரசு துறை கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு என்றே ஆர்.பி.ஐ., வைத்திருக்கும் வலைதளம் இது: https://rbiretaildirect.org.in/ மியூச்சுவல் பண்டு ஆலோசகர்கள் எப்போது பார்த்தாலும், ஒரு பண்டின் வருவாய் ஈட்டும் திறனை பற்றி பேசும்போது, 10 - 15 ஆண்டு ரிட்டர்னை பற்றியே பேசுகின்றனர். அப்போதெல்லாம் முதலீடு செய்யாமல் போய்விட்டோமே என்று எரிச்சலே மிஞ்சுகிறது. இந்நிலையில், ஒரு பண்டு திட்டத்தை எப்படி கணிப்பது? உமா சம்பத், காரைக்குடி உங்கள் ஆதங்கம் உண்மை தான். ஒரு பண்டின் பழைய பர்பாமென்ஸை முகவர்கள் எடுத்து சொல்லும்போது, பல்வேறு சந்தை சுழற்சியில், அந்த பண்டு எப்படி நல்லபடியாக ரிட்டர்னை ஈட்டி தந்திருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே சொல்கின்றனர் என்று புரிந்து கொள்ளுங்கள். அதே பண்டு, அதே மாதிரியான வளர்ச்சியை எதிர்காலத்திலும் ஈட்டி தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தொடர்ச்சியான வளர்ச்சி என்பதை கணிப்பதற்கு நான் ஒரே ஒரு அளவுகோலை மட்டும் கருத்தில் கொள்கிறேன். அந்த பண்டு, எந்த குறிப்பிட்ட குறியீட்டுடன் பெஞ்ச்மார்க் செய்யப்பட்டுள்ளதோ, அதைவிட கூடுதலாக லாபம் ஈட்டுகிறதா என்று பார்ப்பேன். அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் அப்படி கூடுதல் லாபம் ஈட்டியிருக்கிறதா என்றும் பார்ப்பேன். உதாரணமாக, பண்டின் பெஞ்ச்மார்க் நிப்டி 500 எனில், அந்த குறியீடு ஐந்து ஆண்டுகளில் 11 சதவீதம் வளர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பண்டு 13 சதவீதம் வருவாய் கொடுத்திருந்தால், அது 2 சதவீதம் 'ஆல்பா' (கூடுதல் லாபம்) ஈட்டியிருக்கிறது என்று அர்த்தம். இந்த கூடுதல் லாபம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இருந்தால், அந்த பண்டு வலுவானது. அதாவது, மொத்த வளர்ச்சியே இவ்வளவு தான் எனும்போது, அதைவிட சற்றே அதிகமாக இருப்பது மட்டுமே சாத்தியம். அதாவது, சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். அகப்பையில் என்ன அதிகமாக அள்ளி விடவா முடியும்?வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ