உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள் : ரூபாய்க்கும், டாலருக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

ஆயிரம் சந்தேகங்கள் : ரூபாய்க்கும், டாலருக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

எனக்கு பங்கு சந்தையில் ஈடுபடும் ஆர்வம் உள்ளது. பங்கு வர்த்தகத்தில் நேரடி பயிற்சி தரும் நிறுவனங்களை பற்றிய விபரங்கள் தாருங்கள்.

பி.மாதவராஜ், திருவள்ளூர்.மன்னிக்கவும், எந்த நிறுவனப் பெயரையும் என்னால் இந்தப் பகுதியில் பரிந்துரைக்க இயலாது. என்.எஸ்.சி.,யின் வலைதளத்துக்குச் செல்லுங்கள். அங்கே, வர்த்தகத்தை சொல்லித் தரும் பல பாடங்கள் உள்ளன; உங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப படித்துக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு புதிய திட்டத்தின்படி, வருமான வரி படிவம் தாக்கல் செய்தேன். இந்த ஆண்டு மீண்டும் பழைய திட்டத்தின்படி வரி தாக்கல் செய்ய முடியுமா?

என்.சம்பத், சென்னை.மாதச் சம்பளக்காரராக இருந்தால், ஒவ்வொரு நிதியாண்டிலும், நீங்கள் எந்த வரித் திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தப் போகிறீர்கள் என்பதை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், சுயதொழில் செய்பவர்களுக்கும், வணிகம் செய்பவர்களுக்கும், புரொபஷனல்களுக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான், பழைய திட்டத்துக்கு போக முடியும்.

இந்திய ரூபாய்க்கும், அமெரிக்க டாலருக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்? எதை வைத்து நிர்ணயிக்கின்றனர்?

நாகராஜ் கிருஷ்ணன்,வாட்ஸாப்.யாரும் நாணய மாற்று மதிப்பை நிர்ணயம் செய்வதில்லை. அந்த மதிப்பு என்பது, பல்வேறு அம்சங்களின் தொடர்ச்சியாக நிர்ணயம் ஆகிறது. பணவீக்க அளவு அதிகமானால், பணத்தின் வாங்கும் சக்தி குறைந்து, அதன் மதிப்பை குறைக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் இன்னொரு காரணம். அதிக ரெப்போ வட்டி இருக்குமானால், பெரும் தொழிலதிபர்கள்கூட வங்கிகளில் கடன் வாங்கத் தயங்குவர். சாதாரணர்களை பற்றி கேட்கவே வேண்டியதில்லை. விளைவு, வளர்ச்சியில் தேக்கம்.நடப்பு கணக்கு பற்றாக்குறை இன்னொரு காரணம். இறக்குமதி அதிகமாகவும்; ஏற்றுமதி குறைவாகவும் இருக்கும்போது, பற்றாக்குறை அதிகமாகும். டாலர் அதிகளவில் வெளியே போகும். இதேபோல் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதும், நம் ரூபாயின் மதிப்பை சரிக்கும். நாட்டின் கடன் அளவும், ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமற்ற செலவுகள் தான் இதில் மிகப் பெரிய விரோதி.

விருப்ப ஓய்வு பெற்றதன் வாயிலாக பெற்ற பணத்தை, ஒரு பொதுத்துறை நிதி நிறுவனத்தில் 60 மாதங்களுக்கு 7.02 சதவீத வட்டியில் போட்டு வைத்திருக்கிறேன். 30 மாதங்கள் முடிந்துவிட்டன. அந்த வைப்பு நிதியை முறித்து, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.20 சதவீத வட்டியில், ஐந்து ஆண்டுகளுக்கு போடலாம் என்று இருக்கிறேன். முறிப்பதனால் அபராதம் 1.45 லட்சம். ஆனால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் கூடுதல் வருவாயோ 2.25 லட்சம் ரூபாய். இந்த திட்டத்துக்கு, வருங்காலத்தில் வட்டி விகிதம் மேலும் கூடும் என்பதை கருத்தில் கொண்டு, இப்படி செய்யலாமா?

ஜி.பழனிவேல், மதுரை.தாராளமாகச் செய்யலாம்; உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆனால், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் உயரலாம் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். அடுத்த ஆண்டு பல்வேறு விதமான காரணங்களால், அரசுக்கு நிதி நெருக்கடிகள் அதிகமாகலாம் என்ற சூழல் நிலவுகிறது. அதனால், சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பில்லை. எப்படியும் வைப்பு நிதியை முறிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள். ஒரு பகுதியை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திலும்; ஒரு பகுதியை ஓரளவுக்கு நல்ல ரிட்டர்ன் தரக்கூடிய மியூச்சுவல் பண்டு திட்டத்திலும் போட்டு வையுங்கள். இரண்டும் சேர்ந்து, வழக்கத்தை விடக் கூடுதலான வருவாயை உங்களுக்கு ஈட்டித் தரலாம் அல்லவா?

நான் காய்கறி கடை நடத்தி வருகிறேன். 10 - 20 ரூபாய்க்கு யு.பி.ஐ., செய்கின்றனர். 30 ரூபாய்க்கு கீழ் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு, பில் கட்டணத்தோடு, கூடுதலாக 1 ரூபாய் வசூலிக்கலாமா?

கதிர்வேல், கோவை.கூடாது. இந்திய அரசு, யு.பி.ஐ., பரிவர்த்தனையை 'டிஜிட்டல் பொதுப் பொருள்' என்று வரையறை செய்து, அது இலவசமாகத் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. மிகச் சிறிய முதல், பெரிய பரிவர்த்தனைகள் வரை, ரொக்கமில்லாமல், கிரெடிட், டெபிட் கார்டு இல்லாமல் சுலபமாக செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே, இந்த வழிமுறையை நம் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.உங்களுக்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை ஏன் இம்சையாகத் தோன்றுகிறது என்று புரியவில்லை. ஒரு ரூபாய் கூடுதலாக வாங்குவதால், என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்? கூடுதல் லாபம் நிச்சயம் வராது. நீங்கள் யு.பி.ஐ., வசதி தரவில்லை என்றால், வேறு காய்கறி கடையை தேடிக் கொண்டு வாடிக்கையாளர்கள் போய்விடுவர். நஷ்டம் உங்களுக்குத் தான்.

பொதுத் துறை வங்கியில் என் மனைவியோடு சேர்ந்து வீட்டுக்கடன் வாங்கினேன். இன்ஷுரன்ஸ் பாலிசி போட வேண்டும் என்றனர். எனக்கு பாலிசி போடப்பட்டது. என் மனைவிக்கு தைராய்டு பிரச்னை இருப்பதால் பாலிசி போட முடியவில்லை. இப்போது வங்கியில் இருந்து இருவருமே பாலிசி எடுத்திருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். என்ன செய்வது? மனைவி பெயரில் பாலிசி எடுத்தாக வேண்டுமா?

யு.எஸ்.பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம்.ஐ.ஆர்.டி.ஏ., அல்லது ஆர்.பி.ஐ., வழிகாட்டுதல்படி, வீட்டுக்கடன் வாங்குவோர், காப்பீடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், வங்கிகள் இதை வலியுறுத்துகின்றன. அவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் உண்டு. ஒருவேளை உங்களுக்கு அசம்பாவிதம் ஏதேனும் நேர்ந்துவிட்டால், வங்கிக்கான கடன் தொகையை திரும்பப் பெறுவதற்கு அந்த காப்பீடு உதவியாக இருக்கும் என்பது தான் அந்த லாஜிக். நாளைக்கு என்ன நடக்குமோ என்ற பயத்தில் தான் பலரும், வீட்டுக்கடன் வாங்கும்போதே காப்பீடும் எடுக்கின்றனர். ஒரு விஷயத்தை சேர்த்து புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கடன் வாங்கும்போது, பல மடங்கு மதிப்புள்ள சொத்தை அடமானம் வைத்து, எம்.ஓ.டி., வேறு செய்து கொடுக்கிறீர்கள். கடன் அடைபடும் வரை, அந்த வங்கி தான் உங்கள் சொத்துக்கான ஓனர். இந்தக் காப்பீடு என்பது கூடுதல் பாதுகாப்பு. உங்கள் பெயரில் காப்பீடு இருக்கிறது அல்லவா? அது போதுமே என்று சொல்லிப் பாருங்கள். திரும்ப வலியுறுத்தினால், காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். சீக்கிரமாக கடனை அடைத்துவிட்டு வெளியே வர பாருங்கள்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com pj: 98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !